×

யார் வேட்பாளர் என முடிவு செய்யவில்லை மக்களிடம் நல்ல பெயர் எடுத்தவருக்கே வாய்ப்பு: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘‘நாடாளுமன்ற தேர்தலில் யார் வேட்பாளர் என்று இன்னும் முடிவு செய்யவில்லை, மக்களிடம் நல்ல பெயர் எடுத்தவருக்கே வாய்ப்பு வழங்கப்படும்” என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. அந்த வகையில் திமுக சார்பில், அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார். இந்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொது செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாநில நிர்வாகிகள், 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் சேலத்தில் வருகிற வருகிற டிசம்பர் 17ம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோரை பங்கேற்க செய்து இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பிரமாண்டமாக நடத்துவது. மேலும் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை திமுக தலைமை பார்த்துக் கொள்ளும். இத்தேர்தலைப் பொறுத்தவரை, யார் வெற்றி பெறுவார்களோ, அவர்தான் வேட்பாளராக இருப்பார்கள். இந்த தொகுதியில் இவர்தான் வேட்பாளர் என்ற உறுதி எல்லாம் இப்போது வரை இல்லை.

பொதுமக்களிடம் நல்ல பெயர் எடுப்பவருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும். உங்களைப் பொறுத்தவரை நீங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையாக பாடுபட வேண்டும். நாம் கை காட்டுபவரே பிரதமராக வேண்டும். 40 தொகுதிகளில் வென்றால் மட்டுமே அது சாத்தியம். மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இனி எந்தக் காலத்திலும், மகளிர் வாக்குகள் திமுகவுக்குத் தான் என்பதில், எள் முனை அளவும் சந்தேகம் வேண்டியது இல்லை. தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, இளைஞரணியின் செயல்பாடுகள் பன்மடங்கு வேகமெடுத்துள்ளது. இன்றைக்கு, திமுக இளைஞரணி 25 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. தமிழகத்தில் புதிய வாக்காளர்களையும், இளைஞர்களின் வாக்குகளையும் ஈர்க்கும் எஃகு கோட்டையாக திமுக இருந்து வருகிறது. சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் மாநாட்டை பிரமாண்ட மாநாடாக நடத்த வேண்டும். 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாநாடாக இது இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியதாக தகவல் வௌியாகி உள்ளது.

* ‘சேலம் இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள்’
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த பின்னர், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அளித்த பேட்டி: இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை 6 மணிக்கு சிறப்புரை ஆற்றுகிறார்.

அடுத்துவர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குச் சேலம் மாநாடு அடித்தளம் அமைக்கும் மாநாடாக அமையப் போகிறது. கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வருவார்கள் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். இந்த இளைஞரணி மாநாடு திமுக வரலாற்றில் மட்டுமல்ல-தமிழ்நாடு வரலாற்றிலும்-இந்திய வரலாற்றிலும் முக்கியமான மாநாடாக அமையப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post யார் வேட்பாளர் என முடிவு செய்யவில்லை மக்களிடம் நல்ல பெயர் எடுத்தவருக்கே வாய்ப்பு: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED இறக்கும் தருவாயிலும் இளம்...