![]()
புதுடெல்லி: மும்பை தாக்குதலை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, இந்தியா தீவிரவாதத்தை நசுக்கி வருவதாக தெரிவித்தார். கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பையில் ஊடுருவி 60 மணி நேரம் நடத்திய தாக்குதலில் 18 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இதன் நினைவு தினம் குறித்து பிரதமர் மோடி நேற்றைய தனது ‘மன் கி பாத்’ மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் பேசியதாவது:
நவம்பர் 26ம் தேதியை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. இந்த நாளில்தான் நாட்டில் மிகக் கொடூரமான தீவிரவாத தாக்குதல் நடந்தது. தீவிரவாதிகள் மும்பையையும், ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கினர். ஆனால் அந்த தாக்குதலில் இருந்து நாம் மீண்டிருப்பதுதான் இந்தியாவின் திறன். நாம் மீண்டதோடு மட்டுமில்லாமல், தீவிரவாதத்தை முழு துணிச்சலுடன் நசுக்கி வருகிறோம். 1950ல் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து 106 முறை அரசியலமைப்பு திருத்தப்பட்டுள்ளது. காலங்கள், சூழ்நிலைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு அரசுகள் வெவ்வேறு காலங்களில் அரசியலமைப்பில் திருத்தங்களை செய்துள்ளன.
தற்போது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப மகளிர் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மிகவும் திருப்தி அளிக்கிறது. நீர் பாதுகாப்பு பிரச்னை 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று. நீரை சேமிப்பது உயிரை காப்பாற்றுவதை விட குறைவானதல்ல. தற்போது நாட்டில் பணத்தை ரொக்கமாக பயன்படுத்தும் போக்கு குறைந்து வருகிறது. டிஜிட்டல் புரட்சியின் வெற்றி இதை சாத்தியமாக்கி உள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்கு அனைவரும் யுபிஐ அல்லது மற்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்யுங்கள். அதன் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றார்.
* வெளிநாடுகளில் திருமணம் வேண்டாம்
பிரதமர் மோடி மேலும் பேசுகையில், ‘‘இந்தியாவில் திருமண சீசனில் ரூ.5 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடக்கும் என சில வர்த்தக நிறுவனங்கள் மதிப்பிடுகின்றன. இதன் மூலம் பலதரப்பட்ட உள்ளூர் வர்த்தகர்கள் பயனடைகின்றனர். ஆனால் சில பணக்கார குடும்பங்கள் வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துகின்றனர். இது தேவையா என எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த மனநிலை மாற வேண்டும். திருமண விழாக்களை இந்தியாவில் நடத்துங்கள். நமது பணம் நம் நாட்டிற்கே கிடைக்க வேண்டும். சமீபத்திய விழாக்களின் போது நாட்டில் சுமார் ரூ.4 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதை உணர்த்துகிறது’’ என்றார்.
The post மும்பை தாக்குதலை மறக்க முடியாது தீவிரவாதத்தை இந்தியா நசுக்குகிறது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.
