×

இஸ்ரேல் பணய கைதிகள் 2ம் கட்ட விடுவிப்பில் தாமதம் ஏன்?: பரபரப்பு தகவல்கள்

டெய்ர் அல் பலா: இரண்டாம் கட்டமாக 17 பணய கைதிகளை ஹமாஸ் நேற்று முன்தினம் இரவு விடுவித்தது. போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் குற்றஞ்சாட்டியதால் பணய கைதிகள் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் படையினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில்,1,200 பேர் பலியாகினர். 240 பேரை இஸ்ரேல் நாட்டினரை பணய கைதிகளாக பிடித்து வந்தனர். அன்று முதல், காசா மீது இஸ்ரேல் ராணுவம் வெடிகுண்டுகள், ராக்கெட்டுகளை ஏவி தொடர் தாக்குதல் நடத்தியதில் 13 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு கத்தார், எகிப்து, அமெரிக்கா நாடுகள் இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்தன. அவற்றின் முயற்சியால், கடந்த 24ம் தேதி காலை 7 மணி முதல் 4 நாள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 50 பணய கைதிகளாக விடுவிப்பதாக ஹமாஸ், 150 சிறை கைதிகளை விடுவிப்பதாக இஸ்ரேல் அறிவித்தன. முதல் கட்டமாக,24 பேரை ஹமாஸ் விடுவித்தது.

அதையடுத்து இஸ்ரேல் சிறைகளில் இருந்த 39 பேரை அந்த நாடு விடுவித்தது. 2ம் நாளான நேற்று முன்தினம் மாலையில் 13 இஸ்ரேலியர்கள் உட்பட 17 பேரை விடுவிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டியதால் அவர்களை விடுவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் திடீரென பதற்றம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையின் போது ஒப்பு கொண்டபடி நிவாரண உதவிகள் காசாவுக்கு வழங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை என ஹமாஸ் கூறியது. இதையடுத்து, கத்தார் நாட்டின் அதிகாரி தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து நள்ளிரவுக்கு பின் 17 பணய கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் 13 பேர் இஸ்ரேல் நாட்டினர்.அவர்கள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு எகிப்து வழியாக, இஸ்ரேலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதே போல் இஸ்ரேல் சிறைகளில் இருந்து 39 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர். இதில் 24 பேர் பெண்கள், 15 பேர் இளைஞர்கள் என்று கத்தார் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த போரில் காசாவின் வடக்கு பகுதியில் படையின் முன்னணி தளபதியாக இருந்த அகமது அல் கண்டூர் சண்டையில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்தது.

 

The post இஸ்ரேல் பணய கைதிகள் 2ம் கட்ட விடுவிப்பில் தாமதம் ஏன்?: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Deir al-Balah ,Hamas ,Dinakaran ,
× RELATED காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர...