×

கிளர்ச்சி குழுவுடன் பேச்சுவார்த்தை விரைவில் அமைதி ஒப்பந்தம்: மணிப்பூர் முதல்வர் தகவல்

 

இம்பால்: கிளர்ச்சி குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது; விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார். மணிப்பூரில் கடந்த மே மாதம் மெய்டீஸ் மற்றும் குக்கி பழங்குடியினர் இடையே இட ஒதுக்கீடு விவகாரத்தில் வன்முறை வெடித்தது. 7 மாதத்துக்கும் மேல் நீடிக்கும் மோதலில் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மக்கள் தொகையில் 53 சதவீதம் உள்ள மெய்டீஸ் இம்பால் பள்ளத்தாக்கிலும், 40 சதவீதம் உடைய குக்கி இனத்தினர் மலை மாவட்டங்களிலும் வாழ்கின்றனர்.

முதல்வர் பிரேன் சிங் நேற்று கூறுகையில்,‘‘மணிப்பூர் பிரச்னை தொடர்பாக ரகசியமாக செயல்பட்டு வரும் ஒரு பெரிய கிளர்ச்சி குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும்’’ என்றார். தீவிரவாத குழுவின் குறுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகைகள் வெளிவராதது, தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு நிறுத்தம் குறித்து அவரிடம் கேட்டபோது,‘‘ நேற்றுமுன்தினம் தான் எனக்கு தகவல் கிடைத்தது. இது சம்மந்தமாக அறிக்கை அளிக்க போலீசுக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.

மியான்மர் நாட்டினர் மணிப்பூருக்குள் அகதிகளாக வந்துள்ளது பற்றிய கேள்விக்கு,‘‘ மனிதாபமான அடிப்படையில் சிலருக்கு தஞ்சம் வழங்கியுள்ளோம். அங்கு நிலைமை சீரடையும்போது திருப்பி அனுப்பப்படுவார்கள்’’என்றார். தடை செய்யப்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி அமைப்பின் (யுஎன்எல்எப்) கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

The post கிளர்ச்சி குழுவுடன் பேச்சுவார்த்தை விரைவில் அமைதி ஒப்பந்தம்: மணிப்பூர் முதல்வர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Manipur CM ,Imphal ,Manipur ,Chief Minister ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் இன்டர்நெட் சேவை நிறுத்தம்