×

ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றார் பிரதமர் மோடி!

திருமலை: தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றார்.

ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி இன்றிரவு திருப்பதி சென்றடைந்தார். தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து 3 நாட்கள் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்தார். அதன்படி முதல்நாளான நேற்று துக்குகூடா பகுதியில் பிரசாரம் தொடங்கினார். 2வது நாளாக இன்று காலை முதல் மற்ற தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.

இடையில் திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு மீண்டும் தெலங்கானாவுக்கு சென்று பிரசாரம் செய்யும் வகையில் திட்டமிட்டுள்ளார். அதன்படி ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் திருப்பதி ரேணிகுண்டாவுக்கு வந்தார். இதையடுத்து நாளை அதிகாலை ஏழுமலையானை தரிசிக்கிறார்.

அதன்பின்னர் அங்கிருந்து ரேணிகுண்டாவுக்கு திரும்பும் மோடி, மீண்டும் ஐதராபாத் செல்கிறார். நாளை மாலை 18 கிமீ ரோடுஷோவில் பிரதமர் பங்கேற்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு திருப்பதி, திருமலை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து அலிபிரி வழியாக பிரதமர், கவர்னர் மற்றும் முதல்வர் செல்லும் கான்வாய் பகுதிகளில் இன்று காலை முதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் அலிபிரி டோல்கேட் பகுதியில் தீவிரமாக சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

The post ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றார் பிரதமர் மோடி! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tirupathi ,Swami ,Elumalayan Temple ,Thirumalai ,Modi ,Telangana ,Eummalayan Temple ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி...