×

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை: சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சமூக நீதிக் காவலரும் முன்னாள் பிரதமருமான வி.பி.சிங் சிலையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் உத்திரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்கிறார். அலகாபாத் நகரில் ராஜா தயா பகவதி – பிரதாப் சிங் அவர்களுக்கு கடந்த 1931ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி விஸ்வநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) மகனாக பிறந்தார்.

தனது பள்ளிப் படிப்பை டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியிலும், பின்பு புனே பெர்குஷன் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். இதன் பின்னர், கடந்த 1950ம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். மேலும், இவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, சர்வோதய சமாஜத்தில் இணைந்து, பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களை தானமாக வழங்கினார்.

இதுமட்டுமின்றி, வி.பி.சிங் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், வர்த்தகத் துறை துணை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளையும் வகித்தார். இதனைத் தொடர்ந்து, 1980ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று உத்தரபிரதேச மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறந்த முதல்வராக திகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து, வி.பி.சிங் கடந்த 1984ம் ஆண்டு நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய பதவிகளையும் வகித்தார். பின்பு, 1989ம் ஆண்டு இந்தியப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்தவகையில் அவர் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்னையான காவிரி நதி நீர் பிரச்னைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தார். சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணாவின் பெயரையும் சூட்டினார். அதே போல், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினார். மேலும், கலைஞர், வி.பி.சிங்கை பற்றி குறிப்பிடும் போது “அரசியல் நாகரீகத்துக்கும், பண்பாட்டுக்கும், உயர்ந்த லட்சியங்களுக்கும் அடையாளச் சின்னமாக விளங்கியவர்” என்று கூறினார்.

அந்தவகையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக பி.பி. மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்திய சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆவார்.

இத்தகைய சிறப்புமிக்க முன்னாள் இந்திய பிரதமர் சமூகநீதி காவலர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ சிலையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் உத்திரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார். தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

The post சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Former ,Prime Minister V. B. ,Chief Mu. K. Stalin ,Chennai ,Social Justice Guard ,V. B. Singh ,Singh ,
× RELATED கருவாடு மீனாகாது; கறந்த பால் மடி...