×

மழை பெய்துள்ளதால் பந்து ஸ்விங் ஆக வாய்ப்பு; ரவி பிஷ்னோய்க்கு பதில் ஷிவம்துபேவை சேர்த்தால் சிக்கல்: கேப்டன் சூர்யகுமார் யாதவ் திட்டம் என்ன?

திருவனந்தபுரம் :இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணித் தேர்வில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இந்தப் போட்டி நடைபெற உள்ள திருவனந்தபுரம் மைதானத்தில் மழை பெய்து இருப்பதால் போட்டியின் போது வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிக ஸ்விங் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே முதல் போட்டியில் பயன்படுத்தி இருந்தது. தற்போது பிட்ச்சின் தன்மை காரணமாக நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தலாம் என்றாலும் அணியில் நான்காவது பந்துவீச்சாளரை சேர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. மேலும், நான்காவது பந்துவீச்சாளராக ஆல் – ரவுண்டர் சிவம் துபேவை சேர்க்கலாம் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், அது மோசமான விஷயமாக மாறவே வாய்ப்பு அதிகம். அவரது பந்துவீச்சு கடந்த காலங்களில் எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே, அவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்த்தால் அதனால் அணியின் சமநிலை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. முதல் டி20 போட்டியில் வேகப் பந்துவீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார் ஆகியோரும், சுழற் பந்துவீச்சாளர்களாக ரவி பிஷ்னோய், அக்சர் பட்டேல் ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களில் ரவி பிஷ்னோய் 54 ரன்களும், பிரசித் கிருஷ்ணா 50 ரன்களும் விட்டுக் கொடுத்து ஏமாற்றம் அளித்தனர். ஆனால், அவர்கள் இருவர் மட்டுமே ஆளுக்கு ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். மற்ற மூவரும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

இந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டிக்காக ஒரு சுழற் பந்துவீச்சாளரை நீக்கி விட்டு வேகப் பந்துவீச்சாளரை சேர்க்கலாம் என்றால் அது ரவி பிஷ்னோய் தான். அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறார் என்ற புகார் உள்ளது. ரவி பிஷ்னோய் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் சராசரியாக ஓவருக்கு 7 ரன்கள் விட்டுக் கொடுக்கிறார். 101 இன்னிங்ஸில் 124 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இது டி20 போட்டியைப் பொறுத்தவரை மோசம் என கூறி விட முடியாது. அவர் சற்று அதிகம் ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட் வீழ்த்துவதில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

ஆனால், சிவம் துபே ஒரு முழு நேர பேட்ஸ்மேன் தான். அவர் பகுதி நேரமாக மட்டுமே வேகப் பந்துவீச்சாளராக செயல்படுகிறார். அவர் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் சராசரியாக ஓவருக்கு 9 ரன்கள் விட்டுக் கொடுத்து இருக்கிறார். 71 இன்னிங்ஸில் 43 விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். எனவே, ஸ்விங் பந்து வீச கூடுதல் வேகப் பந்துவீச்சாளர் தேவை என சிவம் துபேவை அணியில் எடுத்து ரவி பிஷ்னோய்-ஐ நீக்கினால் அது இந்திய அணிக்கே பாதிப்பாக மாறும்.

The post மழை பெய்துள்ளதால் பந்து ஸ்விங் ஆக வாய்ப்பு; ரவி பிஷ்னோய்க்கு பதில் ஷிவம்துபேவை சேர்த்தால் சிக்கல்: கேப்டன் சூர்யகுமார் யாதவ் திட்டம் என்ன? appeared first on Dinakaran.

Tags : Shivamdubey ,Ravi Bishnoi ,Suryakumar Yadav ,Thiruvananthapuram ,Indian team ,T20 ,India ,Australia ,
× RELATED சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை...