×

மலைக்கோட்டை உச்சியில் இன்று மாலை 40 அடி உயர கோபுரத்தில் மகாதீபம் ஏற்றம்

திருச்சி: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மலைக்கோட்டை உச்சியில் இன்று மாலை 40 அடி உயர கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழா இன்று(26ம் தேதி) கொண்டாடப்படுகிறது. திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் தீபத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை 5 மணிக்கு செவ்வந்தி விநாயகர், தாயுமானசுவாமி, மட்டுவார்குழலம்மை தாயார் மற்றும் உச்சி பிள்ளையாருக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

தொடர்ந்து ஆனந்தவல்லி தாயார் உடனுறை சந்திரசேகரர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பின்னர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு மலை உச்சிக்கு புறப்பாடு நடக்கிறது. அங்கு தீப கோபுரம் முன் சுவாமிகள் எழுந்தருளிய பின்னர் மாலை 6 மணிக்கு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பு உள்ள சுமார் 40 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள 5 அடி உயர செப்புக்கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணிகளை கொண்டு செய்யப்பட்ட திரியில் 800 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவைகளை ஊற்றி மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதேபோல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி சன்னதி மற்றும் குபேரலிங்கேஸ்வரர் சன்னதியிலும் இன்றிரவு மகாதீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் நாளை விழா: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருக்கார்த்திகை விழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி முதல் புறப்பாடாக நாளை காலை 8 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு சந்தனு மண்டபம் வருகிறார். அங்கு காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்கிறார். பின்னர் மாலை 4.30 மணிக்கு அலங்காரம் அமுது செய்து மண்டபத்திலிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். மாலை 6 மணிக்கு உத்தமநம்பி சுவாமிகள் இடைவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து இரண்டாம் புறப்பாடாக இரவு 8 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 8.30 மணிக்கு சொக்கப்பனை கண்டருள்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி சந்தனு மண்டபம் சேருகிறார். அங்கு ஸ்ரீமுகப்பட்டயம் படித்த பின்னர் நம்பெருமாள் திருக்கைத்தல சேவையுடன் சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சேருர்கிறார். இதையொட்டி நாளை மாலை 4.15மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.

The post மலைக்கோட்டை உச்சியில் இன்று மாலை 40 அடி உயர கோபுரத்தில் மகாதீபம் ஏற்றம் appeared first on Dinakaran.

Tags : Mahadeepam ,Trichy ,Karthika Deepatri festival ,Maha Deepam ,Karthikai… ,Malaikotta ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...