×

சேரி என்ற வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க மறுப்பு; நடிகை குஷ்பூ வீட்டை முற்றுகையிட்டு நாளை போராட்டம்: தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவு அறிவிப்பு

சென்னை: சேரி என்ற வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க மறுப்பு தெரிவித்த நடிகை குஷ்பூ வீட்டை முற்றுகையிட்டு நாளை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவு அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவுத்தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் வெளியிட்ட அறிக்கை: நடிகை குஷ்பூ மனசாட்சி உள்ள நபராக இருந்தால், தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருப்பார். ஆனால், தொடர்ந்து சேரி என்ற வார்த்தை அர்த்தங்களைத் தேடும் வேலையில் குஷ்பூ ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

எதிர்ப்பு தாங்காமல் சென்னையை விட்டு ஓடிவிட்டு மீண்டும் திரும்பிய குஷ்பூ, சேரிக்கு புது அர்த்தங்களை சொல்லியிருக்கிறார். வேளச்சேரி, செம்மஞ்சேரி என்றெல்லாம் பெயர் இருப்பதாக கூறி மீண்டும் சப்பைக்கட்டு கட்டும் வேலையைச் செய்திருக்கிறார். சேரி என்று அவர் பயன்படுத்திய இடம் திட்டுவதற்காகத்தான் என்பது அந்தப் பதிவைப் படித்த யாருக்குமே எளிதில் புரியும். இப்படியிருக்க தேடிப்பிடித்து அவர் காரணங்களை கூறும்போதே அவர் பக்கம் தவறு இருப்பதும், அதை மறைக்கப் போராடுவதும் தெரிகிறது. அடித்தட்டு மக்கள் என்றைக்குமே தமிழ்நாட்டில் எள்ளி நகையாடப்பட்டதில்லை.

ஆனால், இருக்கும் இடமோ என்னவோ அந்த பழக்க தோஷத்தில் குஷ்பூ சேரி மொழி என்று பட்டியலின, பழங்குடியின மக்களை அவமதித்திருக்கிறார். குஷ்பூவின் திமிர்த்தனமான சேரி மொழி என்ற கருத்துக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். இன்றைக்கு தலைப்பாகை கட்டிக் கொண்டிருக்கிறோம். குஷ்பூ கக்கிய விஷத்தை கடந்து போனால் மீண்டும் துண்டை இடுப்பில் கட்ட வேண்டிய கொடுமை ஏற்படும்.

எனவே, பெரும் தவறை செய்துவிட்டு மன்னிப்பு கேட்க மறுக்கும் குஷ்பூவை கண்டித்து அவர் வீட்டின் முன்பு திங்கட்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி.,எஸ்டி., பிரிவின் சார்பில் எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் உணர்வுள்ள அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சேரி என்ற வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க மறுப்பு; நடிகை குஷ்பூ வீட்டை முற்றுகையிட்டு நாளை போராட்டம்: தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : KUSHBOO ,TAMIL CONGRESS SC DIVISION ,Chennai ,Sari ,Tamil Nadu Congress SC Division ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...