×

திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், இன்று மாலை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது!

சென்னை: திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இதில் சேலம் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் மாநாட்டில் 5 லட்சம் பேரை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவில் பல்வேறு அணிகள் இருந்தாலும், இளைஞரணிக்கு தொண்டர்கள் மத்தியில் முக்கிய இடம் உண்டு. திமுக இளைஞர் அணி சார்பாக முதன் முதலில் கடந்த 2007ம் ஆண்டு முதல் மாநாடு நெல்லையில் நடத்தப்பட்டது. நெல்லை குலுங்கியது என்று சொல்லும் அளவிற்கு அந்த மாநாட்டை அன்றைய திமுக இளைஞரணி செயலாளராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி காட்டினார். வெள்ளை நிற சீருடையில் மிடுக்காக திறந்த ஜீப்பில் அவர் சென்றார். அந்த பேரணியை திருவாரூர் தேர் வடிவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் இருந்தபடி அன்றைய முதல்வர் கலைஞர் பார்வையிட்டார். அந்த அளவுக்கு அந்த மாநாடு எழுச்சியாக நடந்தது.
அதன்பிறகு திமுக இளைஞரணி சார்பில் மாநாடு எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிக்கு தலைமை ஏற்றதும் அதற்கான பணி தொடங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இளைஞரணியின் 2-வது மாநாடு நடத்தப்பட இருக்கிறது. இதற்காக கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய நகரங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இறுதியாக சேலத்தில் இளைஞர் அணி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி வருகிற டிசம்பர் 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கான அச்சாரமாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நடத்த உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 5 லட்சம் பேரை திரட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் டி.சர்ட் வழங்கப்படுகிறது.

இந்த டி.சர்ட்டுகள் முன்கூட்டியே அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பப்பட உள்ளது. அவர்கள் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் மூலம் வினியோகிப்பார்கள். பல்ேவறு மாவட்டங்களில் இருந்து முன்கூட்டியே வருபவர்கள் தங்குவதற்காக தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் திமுக மாவட்ட-மாநகர- மாநில இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில், சென்னை, அன்பகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். துணைச் செயலாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இக்கூட்டத்தில் இளைஞர் அணியின் மாவட்ட மாநகர மாநில அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டுக்காக முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் மாநாடு தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை இளைஞர் அணியினருக்கு உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார். அது மட்டுமல்லாமல் மாநாடு தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

 

The post திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், இன்று மாலை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது! appeared first on Dinakaran.

Tags : Dimuka Youth Team ,Chennai ,Minister ,Udayaniti Stalin ,Assistant Minister ,Stalin ,Minister Assistant Secretary ,
× RELATED பேருந்துகள் வருகை நேரம், இருக்கும்...