×

எஸ்பி அலுவலகத்தில் காதல் தம்பதி தஞ்சம் குடியாத்தத்தில் பெற்றோர் எதிர்ப்பு

வேலூர், நவ.26: பெற்றோரின் எதிர்ப்பால் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்தவர் தமிழ்செல்வி(22). பி.எஸ்சி பட்டதாரி. குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்தவர் கணேஷ். இவர் ஆசிரியர் பயிற்சி முடித்து சுயதொழில் செய்து வருகிறார். இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் தமிழ்செல்வியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தமிழ்செல்விக்கு உடனடியாக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்ததாக தெரிகிறது.

இதனால் காதல் ஜோடி இருவரும் கடந்த 22ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருப்பதிக்கு சென்று அங்குள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை ஏற்காமல் அவர்களுக்கு தமிழ்செல்வியின் பெற்றோர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று தஞ்சமடைந்தனர்.
அவர்களை உரிய பாதுகாப்புடன் குடியாத்தம் டவுன் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்த போலீசார் அங்கு இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேசி, பிரச்னைக்கு தீர்வு காண அறிவுறுத்தினர்.

The post எஸ்பி அலுவலகத்தில் காதல் தம்பதி தஞ்சம் குடியாத்தத்தில் பெற்றோர் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : SP ,Vellore ,Vellore SP ,Dinakaran ,
× RELATED ₹3 லட்சம் வாங்கிக்கொண்டு மிரட்டும்...