×

கைலாச வாகனத்தில் அண்ணாமலையார் பவனி கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் தரிசனம் கார்த்திகை தீபத்திருவிழா 9ம் நாள் உற்சவம்

திருவண்ணாமலை, நவ.26: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் 9ம் நாளான நேற்று, கைலாச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, இன்று மகாதீப பெருவிழா நடைபெறுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், தீபத்திருவிழாவின் 9ம் நாள் உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. காலை 11 மணியளவில் காலை உற்சவம் ெதாடங்கியது. அதையொட்டி, சிறப்பு அலங்காரம், தீபாராதனை முடிந்து, ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளி காட்சி அளித்தனர்.

சிவ வாத்தியம் முழங்க, மேளதாளத்துடன் மூஷிக வாகனத்தில் விநாயகரும், புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விட்டு விட்டு பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், மாட வீதி முழுவதும் பக்தர்கள் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, நேற்று இரவு 10 மணி அளவில் இரவு உற்சவம் விமரிசையாக நடந்தது. அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது, ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என பக்தி பரவசத்துடன் பக்தர்கள் விண்ணதிர முழங்கினர். பின்னர், மூஷிக வாகனத்தில் விநாயகரும். மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், கைலாச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், காமதேனு வாகனத்தில் பராசக்தி அம்மனும், புலி வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்து அருள்பாலித்தனர். கொட்டும் பனியையும், குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

The post கைலாச வாகனத்தில் அண்ணாமலையார் பவனி கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் தரிசனம் கார்த்திகை தீபத்திருவிழா 9ம் நாள் உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar Bhavani ,Kailasa ,Thiruvannamalai ,Tiruvannamalai Karthikai Deepatri festival ,Ninnamulaiyamman Sametha ,
× RELATED திருவண்ணாமலையில் கோரிக்கைகளை...