×

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை

 

ஜெயங்கொண்டம்,நவ.26: ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே புகையிலை விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோரின் அறிவுரைகளின்படி ஜெயங்கொண்டம் மற்றும் மாவட்டம் முழுவதும் குட்கா, ஹான்ஸ் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அவர் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன், சப்.இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், நடேசன், போலீசார் பாலமுருகன், பாஸ்கர் ஆகியோர் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போதும் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளிக்கடை எதிரில் உள்ள வாழைப்பழ கடைக்கு ஒரு ஆம்னி கார் ஒன்று வந்து நின்றது. சந்தேகப்படும்படி வந்து நின்ற காரை போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் பழக்கடைக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் வெள்ளாழ தெருவை சேர்ந்த காஜாமைதீன் மகன் அப்பாஸ் (37) என்பவர் விற்பனைக்காக வாழைப்பழக் கடையில் கொடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அப்பாஸ் மற்றும் பழக்கடையில் இருந்த கீழ குடியிருப்பை சேர்ந்த ராமயன் மனைவி குமாரி என்கிற ராஜகுமாரி (52) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பெருட்கள், ஆம்னி காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Govt. Jayangondam ,Jayangondam ,Dinakaran ,
× RELATED அதிவேகமாக பைக் ஓட்டியவர்களுக்கு அபராதம்