×

பொதுப்பாதையை பயன்படுத்தியதால் பட்டியலின தாய், மகன் மீது அதிமுக கவுன்சிலர் தாக்குதல்: 3 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு

காங்கயம்: காங்கயம் அருகே பொதுப்பாதையை பயன்படுத்தியதால் பட்டியலின தாய், மகன் மீது கொடூரமாக தாக்கிய அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். காங்கயம் அருகே உள்ள பாப்பினி ஊராட்சி கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி (42), பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் வீட்டின் முன் உள்ள பொதுப்பாதையை பயன்படுத்துவது தொடர்பாக முத்துச்சாமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆதிக்க ஜாதியினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் பொது வழிப்பாதையை பயன்படுத்த கூடாது என மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காங்கயம் ஒன்றிய அதிமுக அவை தலைவரும், யூனியன் கவுன்சிலருமான பழனிசாமி தலைமையில் கட்ட பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, அதிமுக கவுன்சிலர் பழனிசாமி தலைமையில் ஆதிக்க ஜாதியினர், முத்துச்சாமியை ஜாதி பெயரை குறிப்பிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். முத்துச்சாமி தாக்கப்படுவதை கண்ட அவரது தாய் அருக்காணி (65) தடுக்க முயன்ற போது அக்கும்பல் தாயையும் தாக்கியது. இதில் காயமடைந்த முத்துச்சாமி காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து அதிமுக கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி காங்கயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அதிமுக கவுன்சிலர் மைனர் (எ) பழனிசாமி, ரத்தினசாமி (எ) நாகரத்தினம்(47), தாமோதரன் (எ) தனசேகரன்(43) ஆகிய 3 பேர் மீது எஸ்சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், உள்ளிட்ட 3 பிரிவுகளில் காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

* அதிமுக கவுன்சிலரால் உயிருக்கு ஆபத்து பொதுமக்கள் புகார்
வழக்கு பதிவு செய்யப்பட்ட அதிமுக கவுன்சிலர் பழனிசாமி மீது சூதாட்டம், வீராணம்பாளைத்தில் தனியார் ஓட்டல் சூறையாடப்பட்ட வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாப்பினி குளத்துப்பாளையம் ஊர் பொதுமக்கள் கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்ட கும்பலால் தங்களுக்கு ஆபத்து இருப்பதாக கூறி பாதுகாப்பு வேண்டி 50க்கும் மேற்பட்டடோர், காங்கயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

The post பொதுப்பாதையை பயன்படுத்தியதால் பட்டியலின தாய், மகன் மீது அதிமுக கவுன்சிலர் தாக்குதல்: 3 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Kangayam ,Dinakaran ,
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...