×

தாமதமாகும் சென்னை – பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை பணிகள்: வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை விரிவாக்க திட்ட டெண்டர் 18வது முறையாக திரும்ப பெறப்பட்டது; தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டு

சென்னை: தேசிய நெடுஞ்சாலையானது நாட்டின் முதன்மை சாலைகளாக சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்திற்கு அடிப்படையாக உள்ளது. மாநிலத் தலைநகரங்கள், முக்கிய துறைமுகங்கள், ரயில்வே சந்திப்புகள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை இணைக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 6,606 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 1477 கி.மீ. நீளமுள்ள சாலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலமாகவும் மீதமுள்ள 5,134 கி.மீ. நீளமுள்ள சாலைகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தாலும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலைகளுக்கான மேம்பாட்டுப் பணி, பராமரிப்புப் பணிகள் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வழங்கும் நிதி வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றது.

இதில் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சேலம்- திருப்பத்தூர்- வாணியம்பாடி சாலை இரண்டு வழி சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்துதல், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை- ராணிப்பேட்டை , ஸ்ரீபெரும்புதூர் – வாலாஜா மற்றும் ஆம்பூரில் 4 வழி சாலைகளை 6 வழி சாலைகளாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த சாலை விரிவாக்கம் பணிகள் பல நாட்களாக முடிக்கப்படமல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தாமதமாகி வருகிறது.

ஆம்பூரில் 2.8 கி.மீ. தொலைவுக்கு 6 வழிச்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளும், 750 மீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான 71 கி.மீ நீள சாலைவிரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் 2021-ஆம் ஆண்டிற்குள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், 50% பணிகள் கூட முடியவில்லை. ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜா வரை மொத்தம் 34 மேம்பாலங்கள் கட்டப்பட வேண்டும், ஆனால், இதுவரை 11 பாலங்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இது மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவு ஆகும். சாலை விரிவாக்கப் பணிகளும் ஆங்காங்கே துண்டு துண்டாக முடிக்கப்பட்ட நிலையில் முடங்கிக் கிடக்கின்றன. மேலும் வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை இடையே சாலை விரிவாக்கம் பணிகள் விடப்பட்ட டெண்டர் 18வது முறையாக திரும்பபெறப்பட்டுள்ளது. மேலும் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை பகுதி அகலப்படுத்தும் பணி, 18வது முறையாக, டெண்டரை திறப்பதை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 18வது முறையாக ஒத்திவைத்துள்ளதால், சிவப்பு நாடாவில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்த போதிலும், பல பிரச்னைகளால் சாலை விரிவாக்க திட்டம் கிடப்பில் உள்ளது.

சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை பகுதி ஆந்திரா வழியாக தமிழகத்தை கர்நாடகாவுடன் இணைக்கும் 28 கி.மீ. தூர நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையில் இருந்து ஆறு வழிச்சாலையாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட இருந்தது. இந்த சாலை பணிகளுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சாலை பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரை 18 முறை டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் டெண்டர் விடப்பட்டு அது திறக்கப்படாமல் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 28 கி.மீ. சாலை விரிவாக்கத்திற்காக இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ.980 கோடி ஆகும்.

ஸ்ரீபெரும்புதூர்-கிருஷ்ணகிரி வழித்தடத்தில் பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகள் நிலுவையில் உள்ளது. மேலும் தேசிய 4 இல் பலமனேர்-ஹோஸ்கோட் வழியாக) மாற்றுப் பாதையாக செயல்படுவதை இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து விட்டாலும், இன்னும் டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய டெண்டர் அறிவிப்பு படி, 2024ம் ஆண்டு ஜன.9ம் தேதிக்குள் டெண்டர் கோரி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விரிவாக்க பணிக்காக ஒன்றிய அரசின் ‘கதி சக்தி’ ஒப்புதலை இன்னும் பெறவில்லை என்றும், அடுத்த கூட்டத்தில் அது அனுமதிக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராணிப்பேட்டை முகுந்தராயபுரம் சிப்காட்டில் இருந்து சித்தூருக்கு செல்லும் சாலைகளின் பயண நேரத்தைக் குறைப்பதும், ஆரணி மற்றும் திருவண்ணாமலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 48-ஐ பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் எளிதாக பெங்களூரு வர வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். சென்னை துறைமுகத்திலிருந்து கனரக சரக்கு வாகனங்கள் செல்லும் முக்கிய வழித்தடங்களில் இதுவும் ஒன்று.

இது குறித்து லாரி உரிமையாளர்கள் கூறியதாவது: சென்னை மற்றும் பெங்களூருவை இணைக்கும் மூன்று பெரிய சாலைத் திட்டங்களைப் பற்றி ஒன்றிய அரசு கடந்த பத்தாண்டுகளாக பேசி வந்தாலும், ஒரு திட்டம் கூட நிறைவேற்றப்படவில்லை. நம்மில் பெரும்பாலோர் இப்போது நெடுஞ்சாலை 48 ஐ விரும்புகிறோம், அது சென்னை மற்றும் பெங்களுரில் முதல் 100 கிமீ வரை மிகவும் மோசமாகவும், ஆபத்து நிறைந்ததாக உள்ளது. அதிக காலதாமதத்தால், ஏற்கனவே உள்ள பாதைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு மட்டுமின்றி, அதிக விபத்துகளும் ஏற்படுகின்றது. ஒன்றிய அரசு இதுபோன்ற திட்டங்களை விரைந்து செயல்படுத்தாமல் இருப்பது தென் மாநிலங்களின் வளர்ச்சியில் உள்ள அலட்சியப் போக்கையே காட்டுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய டெண்டர் அறிவிப்புப்படி, 2024ம் ஆண்டு ஜன.9ம் தேதிக்குள் டெண்டர் கோரி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
* இந்த விரிவாக்க பணிக்காக ஒன்றிய அரசின் ‘கதி சக்தி’ ஒப்புதலை இன்னும் பெறவில்லை என்றும், அடுத்த கூட்டத்தில் அது அனுமதிக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post தாமதமாகும் சென்னை – பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை பணிகள்: வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை விரிவாக்க திட்ட டெண்டர் 18வது முறையாக திரும்ப பெறப்பட்டது; தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai – ,Bengaluru National Highway ,Wallajapet ,National Highways Authority ,CHENNAI ,National Highways ,Chennai- ,Bengaluru ,National Highway ,Ranipet ,Dinakaran ,
× RELATED சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் திருட்டு: 4 பேர் கைது