×

டிச.4ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.2 அனைத்துக் கட்சி கூட்டம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி டிசம்பர் 2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு முடிவடைவதால் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத்தொடர் தற்போதைய பாஜ அரசின் கடைசி கூட்டத் தொடராக இருக்கும். இந்நிலையில் டிசம்பர் 2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கூட்டத்தொடர் கூடுவதற்கு ஒருநாள் முன்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும். ஆனால் 5 மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி வௌியாக உள்ளதால், அதற்கு முன் அனைத்துக் கட்சி கூட்டம் கூட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் 3 புதிய குற்றவியல் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

அத்துடன் திரிணாமூல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீதான லஞ்ச புகார் குறித்த நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கியப் பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், அவையை சுமூகமாக நடத்துவது குறித்து டிசம்பர் 2ம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post டிச.4ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.2 அனைத்துக் கட்சி கூட்டம்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Winter Session of Parliament ,Union Government ,New Delhi ,Parliament ,Parliamentary Winter Session ,Union ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...