×

கொச்சி பல்கலைக்கழகத்தில் பரிதாபம் இசை நிகழ்ச்சியில் நெரிசல் 4 மாணவ, மாணவிகள் பலி: 50க்கும் மேற்பட்டோர் காயம்

திருவனந்தபுரம்: கொச்சி பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவ, மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். கேரள மாநிலம் கொச்சியில், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. நேற்று இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கில் டெக் பெஸ்ட் என்ற பெயரில் மாணவர் கலைவிழா நடந்தது. இதில் பிரபல பாடகி நிகிலா காந்தியின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை பார்ப்பதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் தவிர வேறு கல்லூரிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் வந்திருந்தனர். இதனால் பல்கலைக்கழக வளாகமே மாணவர்களால் நிரம்பி வழிந்தது. இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது மேடைக்கு அருகே உள்ள படிக்கட்டில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் திடீரென தடுமாறி கீழே விழுந்தனர். ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் அங்கு நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் அந்த இடத்திலேயே மூச்சுத் திணறி மயக்கமடைந்தனர்.

அவர்களை உடனடியாக மீட்டு கொச்சி களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 2 மாணவிகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இசை நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post கொச்சி பல்கலைக்கழகத்தில் பரிதாபம் இசை நிகழ்ச்சியில் நெரிசல் 4 மாணவ, மாணவிகள் பலி: 50க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Tags : Parithapam ,Kochi ,University ,Thiruvananthapuram ,Kochi University ,
× RELATED கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை