×

மாநிலக்கல்லூரி வளாகத்தில் நாளை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்னையான காவிரி நதி நீர் பிரச்னைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து கொடுத்தார். சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணாவின் பெயரையும் சூட்டினார். அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினார்.

கலைஞர், வி.பி.சிங் பற்றி குறிப்பிடும் போது “அரசியல் நாகரிகத்துக்கும், பண்பாட்டுக்கும், உயர்ந்த லட்சியங்களுக்கும் அடையாள சின்னமாக விளங்கியவர்” என்றார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதி காவலர் வி.பி.சிங்.

இத்தகைய சிறப்புமிக்க முன்னாள் பிரதமர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, மாநிலக் கல்லூரியில் ரூ.52 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணியளவில் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், அமைச்சர்கள், குடும்பத்தினர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

The post மாநிலக்கல்லூரி வளாகத்தில் நாளை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,VP Singh ,Rajya ,College ,Tamil Nadu Government ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,V. P. Singh ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நீலகிரி அவலாஞ்சியில் 14 செ.மீ. மழை பதிவு