×

சுரங்க இடிபாடுகளில் சிக்கி துளையிடும் கருவி உடைந்தது 41 தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல் நீடிப்பு: ஐதராபாத்தில் இருந்து புதிய கருவி கொண்டு வர ஏற்பாடு

உத்தரகாசி: உத்தரகாண்ட் சுரங்கத்தில் இடிபாடுகளில் சிக்கி ஆகர் துளையிடும் கருவி உடைந்ததால், 41 தொழிலாளர்களை மீட்பதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இருந்து பிளாஸ்மா கட்டர் கருவி கொண்டு வரப்பட இருப்பதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறி உள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சில்க்யாரா பகுதியில் 4.5 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும் சுரங்கப்பாதையின் ஒருபகுதி கடந்த 12ம் தேதி இடிந்து மண் சரிந்தது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

அமெரிக்காவின் ஆகர் துளையிடும் கருவி மூலம் 57 மீட்டர் தூரத்திற்கு துளையிட்டு 800 மிமீ அகல இரும்பு குழாய் அமைத்து தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 22ம் தேதி 45 மீட்டர் வரை துளையிடப்பட்ட நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால், அதன் பின் இரும்பு கம்பி குறுக்கிட்டது, ஆகர் இயந்திரத்தில் கோளாறு காரணமாக கடந்த 2 நாட்களாக மீட்பு பணி நடக்கவில்லை. இந்நிலையில், 14ம் நாளான நேற்றும் மீட்பு பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணியை ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘சுரங்க இடிபாடுகளில் சிக்கி ஆகர் இயந்திரத்தின் பிளேடு உடைந்து விட்டது. இதனால் ஐதராபாத்தில் இருந்து பிளாஸ்மா கட்டர் கருவி கொண்டு வரப்பட்டு மீதமுள்ள பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார். தற்போது வரை 46.8 மீட்டர் தூரத்திற்கு துளையிடப்பட்டு 800 மிமீ அகல இரும்பு குழாய் பொருத்தப்பட்டு விட்டது. இன்னும் 10 முதல் 12 மீட்டர் வரையில் மட்டுமே துளையிட வேண்டியுள்ளது.

அவற்றை இயந்திரங்கள் இல்லாமல் சாதாரண கருவிகள் கொண்டு கையால் துளையிடலாமா என்பது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு செய்தால் அது முடிய நீண்ட நேரமாகும். இப்பணி இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், 86 மீட்டர் தூரத்திற்கு சுரங்கத்தில் மேல் இருந்து செங்குத்தாக துளையிட்டு மீட்புப்பணி மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்காக பெரிய துளையிடும் இயந்திரம் ஒன்று சுரங்கத்தின் மேல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக எந்த முறையில் மீட்பு பணி மேற்கொள்வது என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* மன அழுத்தத்தில் தொழிலாளர்கள்
மீண்டும் மீண்டும் மீட்பு பணியில் சிக்கல்கள் ஏற்பட்டு வருவதால், சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் மன அழுத்தம் அடைந்திருப்பதாக அவர்களது உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களுக்கு 6 மீட்டர் அங்குல குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அதன் வழியாக கேமரா அனுப்பப்பட்டு உள்ளே தொழிலாளர்கள் நிலை குறித்து உறவினர்கள் அறியவும் வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட வேண்டுமென அப்பகுதியில் உள்ள கிராமமக்கள் பலரும் பூஜை செய்து கடவுளை வழிபட்டு வருகின்றனர்.

The post சுரங்க இடிபாடுகளில் சிக்கி துளையிடும் கருவி உடைந்தது 41 தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல் நீடிப்பு: ஐதராபாத்தில் இருந்து புதிய கருவி கொண்டு வர ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Uttarakasi ,Uttarakhand ,Dinakaran ,
× RELATED ஹைதராபாத்தில் திருமணத்திற்கு முன்பு...