லக்னோ: நாட்டுக்காக வீர மரணம் அடைந்த கேப்டன் ஷுபம் குப்தாவின் தாயாரிடம் நிதியுதவி வழங்கி புகைப்படம் எடுத்துக்கொள்ள பாஜக அமைச்சர் முண்டியடித்த நிகழ்வுக்கு கண்டனம் வலுத்துள்ளது. உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஷுபம் குப்தா. இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி வந்த இவர் கடந்த புதன்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு உத்திரபிரதேச அரசு ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் ஷுபம் குப்தாவின் குடும்பத்தினருக்கு காசோலையை வழங்க பாஜக அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் மற்றும் அவரது ஆதாரவாளர்கள் சென்றிருந்தனர். மகனின் பிரிவால் கண்ணீர் விட்டு கதறி கொண்டு இருந்த அவரது தாயாரின் கைகளில் வலுக்கட்டாயமாக காசோலையை வழங்கிய அமைச்சர் அவருடன் புகைப்படம் எடுத்து கொள்ள முயற்சித்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ராணுவ வீரரின் உயிர் தியாகத்தில் கூட பாஜக அரசியல் லாபம் தேடுவதாக காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக தலைவரின் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
The post ராணுவ வீரரின் உயிர் தியாகத்தில் அரசியல் லாபம் தேடுவதா?: பாஜக அமைச்சரின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் appeared first on Dinakaran.
