×

விவசாயிகள் ஆர்ப்பாட்டம் காய்ந்த கரும்புகளை எரித்து

ஆரணி, நவ.25: ஆரணி ஆர்டிஓ அலுவலகம் எதிரே நேற்று, விவசாயிகள் சங்கத்தினர் காய்ந்த கரும்புகளை தீயிட்டு எரித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சினந்தல் கிராமத்தில் அரசு இடத்தை ஆக்கிரமித்து கொண்டு, அங்கு வெட்டப்பட்ட 50 டன் கரும்புகளை சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பவிடாமல் அடியாட்களை வைத்து மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட விவசாயி ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சென்ற அதிகாரிகளுக்கும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆரணி ஆர்டிஓ அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் தாமோதரன், குப்பன், பார்த்தசாரதி, ஒன்றிய தலைவர் குப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், சினந்தல் கிராமத்தில் விவசாய நிலத்தில் வெட்டி வைத்து 20 நாட்களுக்கு மேலாக காய்ந்த கரும்புகளை எடுத்து வந்து தீயிட்டு எரித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கரும்புகளை ஏற்றி செல்லவிடாமல் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து, ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

The post விவசாயிகள் ஆர்ப்பாட்டம் காய்ந்த கரும்புகளை எரித்து appeared first on Dinakaran.

Tags : Arani ,Arani RTO ,Farmers Union ,Dinakaran ,
× RELATED அனைத்து பாசன, வடிகால் வாய்க்காலில் ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்