×

இஸ்ரேல்-ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம் துவங்கியது: 25 பணய கைதிகள் விடுவிப்பு

டெய்ர் அல் பலா(காசா முனை): இஸ்ரேல் -ஹமாஸ் போர் நேற்று 49வது நாளை எட்டிய நிலையில், 4 நாள் தற்காலிக போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்தது. இதில்,ஹமாஸ் பிடியில் உள்ள 25 பணயக் கைதிகள் முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டனர். பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதலை நடத்தியது. இதையடுத்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரைவழியாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் காசாவில் பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. தங்கள் வீடுகளை இழந்து லட்சக்கணக்கான மக்கள் காசாவின் தெற்கு பகுதியை நோக்கி இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில், கத்தார், எகிப்து, அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வந்தன. இந்த பேச்சுவார்த்தையின் பலனாக, 4 நாள் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது. நேற்று காலை 7 மணி முதல் அமலுக்கு வந்த இந்த அறிவிப்பை பிரான்ஸ் உள்பட சில நாடுகள் வரவேற்றுள்ளன.

இதில் குறைந்தது 50 பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தரப்பு 150 பாலஸ்தீனர்களை விடுவிக்கும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் தினமும் 200 லாரிகளில் காசாவுக்கு எரிபொருள் மற்றும் நிவாரண பொருட்கள் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என இருதரப்பும் தெரிவித்தன. முதல் கட்டமாக 13 இஸ்ரேலிய பணயக் கைதிகளையும், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 பேரையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.

* மீண்டும் போர் தொடங்கும்: நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், ‘‘ ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும். ஹமாஸை முழுவதுமாக அழித்து, பணயக் கைதிகள் அனைவரையும் விடுவித்து இஸ்ரேலை அச்சுறுத்தும் சக்தி ஏதும் காசாவில் இல்லை என்பதை உறுதி செய்வதே எங்கள் இலக்கு. இது போர் நிறுத்தம் இல்லை, பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே. இஸ்ரேலுக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஹமாஸ் படையினரை ஒழிக்க மீண்டும் போர் தொடங்கும்’’ என்றார்.

The post இஸ்ரேல்-ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம் துவங்கியது: 25 பணய கைதிகள் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Israel ,-day ,Deir al-Balah ,Gaza ,Hamas ,Dinakaran ,
× RELATED காசாவில் ஒரேநாளில் 67 பேர் பரிதாப பலி: இஸ்ரேல் மீது ஈரான் குற்றச்சாட்டு