×

கோவை கல்லூரியில் மீண்டும் ராகிங்: 12 மாணவர்களை தாக்கி கொலை மிரட்டல், 2 சீனியர்கள் சஸ்பெண்ட், டீக்கடைக்காரர் கைது

சூலூர்: சூலூரில் இன்ஜினியரிங் கல்லூரியில் 12 மாணவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 சீனியர்கள், டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டனர்.  கோவை மாவட்டம் சூலூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் தங்கி சேலத்தை சேர்ந்த அகிலேஷ் என்ற மாணவர் 2ம் ஆண்டு மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார். அவரது வகுப்பில் படிக்கும் 12 மாணவர்களும் அதே விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அகிலேஷ் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வரும்போது சட்டையை டக்கின் செய்யாமல் இருந்துள்ளார்.

இதை கவனித்த 3ம் ஆண்டு மாணவர்கள் குரல் இனியன், அரவிந்த், 4ம் ஆண்டு படிக்கும் கும்பகோணத்தை சேர்ந்த முத்துகுமார், கரூரை சேர்ந்த கோகுல் ஆகியோர் அகிலேஷ் தங்கி இருக்கும் விடுதிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த அகிலேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 12 பேரையும் அவர்கள் மிரட்டியுள்ளனர். மேலும், கல்லூரிக்குள் காப்பு கயிறு கட்டக்கூடாது, முழுக்கை சட்டை அணிந்து டக்கின் செய்திருக்க வேண்டும், சீனியர் முன்பு கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது, சீனியர் வந்தால் மரியாதை செலுத்த வேண்டும் என்று 4 சீனியர் மாணவர்களும் சேர்ந்து ஜூனியர் மாணவர்களை எச்சரித்துள்ளனர்.

இது பிடிக்காததால் அகிலேஷ், விடுதியில் இருந்து வெளியேறினார். இதனால் ஆத்திரமடைந்த 4 சீனியர் மாணவர்களும் நேற்று மாலை அகிலேஷ் மற்றும் அவருடன் படிக்கும் 12 மாணவர்களையும் கல்லூரி முடிந்த பின் சூலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வெங்கடேஷ் என்ற மாணவரின் அறைக்கு வருமாறு கூறி உள்ளனர்.  அகிலேஷ் உள்பட அனைத்து மாணவர்களும் அறைக்கு சென்றதும் 4 சீனியர் மாணவர்களும், அவர்களை எச்சரித்து அனுப்பினர். கோகுல், முத்துகுமார் இருவரும் அகிலேஷை பைக்கில் ஏற்றிக்கொண்டு முத்துகுமாரின் நண்பரான சூலூர் டீக்கடையில் ேவலை பார்க்கும் தனபால் என்பவரின் அறைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மூவரும் அகிலேஷை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கடுமையாக அடித்து, தாக்கி உள்ளனர். மேலும், அகிலேஷின் வாட்ச், செல்போனை உடைத்தனர். அகிலேஷுக்கு அவர்கள் கொலைமிரட்டலும் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த அகிலேஷ், சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் ராகிங்கில் ஈடுபட்ட கோகுல் (21), முத்துகுமார் (21), தனபால் (27) ஆகியோரை கைது செய்தனர். கைதான இரு மாணவர்களையும் இந்திய தண்டனை சட்டம் 41ஏ பிரிவின் கீழ் சம்மன் வழங்கி இடைகாலமாக போலீசார் விடுவித்தனர்.

இந்நிலையில், ராகிங் சம்பவத்தில் ஈடுபட்ட கோகுல் மற்றும் முத்துகுமாரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நேற்று மாலை உத்தரவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் 2ம் ஆண்டு மாணவரை தாக்கி மொட்டை அடித்து ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது சூலூரில் மேலும் ஒரு கல்லூரி மாணவருக்கு ராகிங் நடந்திருப்பது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கோவை கல்லூரியில் மீண்டும் ராகிங்: 12 மாணவர்களை தாக்கி கொலை மிரட்டல், 2 சீனியர்கள் சஸ்பெண்ட், டீக்கடைக்காரர் கைது appeared first on Dinakaran.

Tags : Sulur ,Coimbatore ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்