×

விமான, மெட்ரோ ரயில் பயணம், திரைப்படம், மாமல்லபுரத்துக்கு சுற்றுலா மாற்றுத்திறன் குழந்தைகளை ஊக்குவிக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

சென்னை: மாற்றுத்திறன் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உலக மாற்றுத்திறனாளிகள் தினமானது, ஆண்டுதோறும் டிசம்பர் 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களை ஊக்குவித்து, அவர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளினால் சிறப்பு குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் தன்னம்பிக்கை மேம்படுவதுடன், அவர்களின் சமூக ஒருங்கிணைப்பும் வலுப்பெறும்.

அந்த வகையில், நேற்று திருச்சி மாவட்டத்தில் இருந்து பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலை பள்ளியை சார்ந்த 18 மாணவர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்துவரப்பட்டு, அவர்களுக்கு சிறப்பானதொரு பயண அனுபவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அரசு சிறப்பு பள்ளிகளில் பயிலும் பார்வை, செவி மற்றும் அறிவுசார் மாற்றுத்திறன் மாணவர்கள் 189 பேர்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் அனுபவத்தினை பெறும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உதவியுடன் வரும் 27ம் தேதி (திங்கள்) காலை 11.30 மணியளவில் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் வரை சென்று மீண்டும் திரும்பும் வகையில் பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 27ம் தேதி மாலை 3.30 மணியளவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பான அனுபவமளிக்கும் வகையில் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள தனியார் திரையரங்கில் திரைப்படக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் மாவட்ட சிறப்பு பள்ளிகளில் பயிலும் 58 மாற்றுத்திறன் மாணவர்கள் தமிழ்நாட்டின் தலைச்சிறந்த சுற்றுலா தலமான மகாபலிபுரம் சுற்றுலா தலத்தினை ‘புதிய வால்வோ சிறப்பு பேருந்தில்’ பயணித்து, கண்டுகளிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியினை வருகிற 29ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைப்பார். இந்நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துஅமைப்புகளுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

The post விமான, மெட்ரோ ரயில் பயணம், திரைப்படம், மாமல்லபுரத்துக்கு சுற்றுலா மாற்றுத்திறன் குழந்தைகளை ஊக்குவிக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,CHENNAI ,Disabled Persons Welfare Department ,
× RELATED மாமல்லபுரம் மாசி மக விழாவில் காணாமல் போன சிறுமி மீட்பு