×

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீண்டும் பின்னடைவு

தெஹ்ராதூண்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா – பர்கோட் இடையே 4.5 கி.மீ தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது, கடந்த 12ம் தேதி மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப் பாதைக்குள் பணியாற்றிய 41 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கினர். இவர்களை மீட்கும் முயற்சி கடந்த 13 நாட்களாக நடந்து வருகிறது. சுரங்கப் பாதைக்குள் ‘ஆகர்’ என்ற அமெரிக்க தயாரிப்பு இயந்திரம் மூலம் 51 மீட்டர் தூரத்துக்கு, பக்கவாட்டில் குழி தோண்டி, இரும்புக் குழாய்களை பொருத்தும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சுரங்கத்தில் தொழிலாளர்கள் 57 மீட்டர் தூரத்தில் சிக்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவே 41 பேரும் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 12 மீட்டர் தூர இடைவெளி இருக்கும்போது, குழி தோண்டும் பணியில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் பணிகள் சற்று தாமதமாகின. இன்றைய நிலையில் மீட்புக் குழுவினர் உள்ளே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு மிக அருகில் சென்றுவிட்டனர். கிட்டத்தட்ட 9 முதல் 12 மீட்டர் தூர இடைவெளியில் தான் உள்ளனர். அவர்கள் இன்று மாலைக்குள் மீட்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் மீட்கும் பணியில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எஞ்சிய இடிபாடுகள் கடினமாகவும், கம்பிகள் இருப்பதாலும் ஆகர் இயந்திரம் செயல்பட முடியாத நிலை நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

துளையிடும்போது மீண்டும் இரும்புக் கம்பிகள் தென்பட்டதால் துளையிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் மீட்புப் படையினர் நேரடியாக பைப் உள்ளே சென்று இரும்பு அழி கம்பிகளை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாலை 5 மணி முதல் 7 மணி வரை சுமார் 3 மீ. மட்டுமே ஆகர் இயந்திரத்தின் மூலம் துளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 7 மீ. துளையிட்டால் மட்டுமே சிக்கி உள்ளவர்களை மீட்க முடியும் என்ற நிலையில் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரும்பு கம்பிகளை அகற்றிய பிறகே மீண்டும் துளையிடும் பணி தொடங்கும் என மீட்புக் குழு தெரிவித்துள்ளது. மேலும் வேறு இயந்திரம் அல்லது கையால் இடிபாடுகளை அகற்றுவது குறித்து மீட்புக்குழுவினர் பரிசீலனை செய்து வருகிறது.

The post உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீண்டும் பின்னடைவு appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,TEHRADUN ,UTTARAKHAND SUBWAY ,Silgyara ,Uttarakasi ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்