×

படுக்கையறைக்குள் பாம்பை விட்டு மனைவி, மகளை கொன்ற கணவன்: ஒடிசாவில் பயங்கரம்


கஞ்சம்: ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் கபிசூரியநகர் பகுதியை சேர்ந்த கணேஷ் பத்ரா (25), அவரது மனைவி பசந்தி பத்ரா தம்பதி வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 வயதில் ெபண் குழந்தை உள்ளது. தம்பதிக்குள் குடும்ப சண்டை இருந்ததால் கடந்த சில வாரங்களுக்கு முன் தனது கணவர் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் பசந்தி புகார் அளித்தார். அதனால் தனது மனைவியை கொல்ல கணேஷ் பத்ரா திட்டமிட்டார். கணவர் மீது போலீசில் புகார் அளித்திருந்தாலும் கூட, தம்பதிகள் ஒரே வீட்டில் தான் வசித்து வந்தனர். இந்நிலையில் தனது மனைவியை கொல்வதற்காக, கடந்த சில வாரங்களுக்கு முன் பாம்பு பிடிக்கும் நபரான பசந்தா ஆச்சார்யாவின் உதவியை கணேஷ் நாடினார். அவரிடம், ‘சிவன் கோயிலில் வழிபாடு செய்வதற்காக விஷமுள்ள பாம்பு ஒன்று தேவை’ என்று கேட்டார்.

அதனை ஏற்றுக் கொண்ட பாம்பு பிடிக்கும் நபரான பசந்தா ஆச்சார்யா, தனது குடிசை வீட்டில் வைத்திருந்த விஷமுள்ள நாகப்பாம்பை, ஒரு பிளாஸ்டிக் ஜாடியில் வைத்து கணேஷ் பத்ராவிடம் கொடுத்தார். அந்தப் பாம்பை தனது வீட்டிற்கு கொண்டு வந்து, வீட்டினுள் மறைவான இடத்தில் வைத்திருந்தார். சம்பவ நாளில் பசந்தியும், அவரது இரண்டு வயது மகளும் ஓர் அறையில் தூங்கினர். அந்த சமயத்தில் பிளாஸ்டிக் ஜாடியில் வைத்திருந்த நாகப்பாம்பை எடுத்து, மனைவி படுத்திருந்த அறைக்குள் விட்டார். அந்தப் பாம்பும், வீட்டில் படுத்திருந்த தாய், மகளை கடித்தது. இருவரும் அலறி துடித்த சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தாய், மகளை மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தாயும் மகளும் பலியாகினர்.

இவ்விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து கஞ்சம் எஸ்பி ஜக்மோகன் மீனா கூறுகையில், ‘கணவன் – மனைவி ஒன்றாக வாழ்ந்தாலும் கூட, தனது மனைவி பசந்தியை கொல்ல கணேஷ் நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தார். தனது மனைவியைக் கொல்ல திட்டம் தீட்டிய கணேஷ், செப்டம்பர் 26ம் தேதி தனது தந்தையின் பெயரில் புதியதாக சிம்கார்டு வழங்கினார். அந்த சிம் கார்டைப் பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள பாம்பு பிடிக்கும் நபரிடம் ெதாடர்பு கொண்டு விஷமுள்ள பாம்பை வாங்கி வந்தார். வீட்டில் மனைவியும், மகளும் தூங்கிக் கொண்டிருந்த போது, மறைவான இடத்தில் வைத்திருந்த பாம்பை எடுத்து அவர்களது அறைக்குள் விட்டார்.

அந்த பாம்பும் அறைக்குள் படுத்திருந்த தாய், மகளை கடித்ததில் அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். தனது மகளையும், பேத்தியையும் மருமகன் கணேஷ் கொலை செய்ததாக மாமனார் புகார் அளித்தார். தொடர் விசாரணையில் பாம்பை கடிக்கவைத்து கணேஷ் 2 கொலையை நடத்தியது அம்பலமானது. தற்போது கணேஷ் பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள பாம்பு பிடிக்கும் நபர் பசந்தா ஆச்சார்யாவை தேடி வருகிறோம்’ என்றார்.

 

The post படுக்கையறைக்குள் பாம்பை விட்டு மனைவி, மகளை கொன்ற கணவன்: ஒடிசாவில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Odisha Ganjam ,Ganesh Patra ,Kapisurinagar ,Ganjam district, Odisha ,Basanti Patra ,
× RELATED ஒடிசாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து!:...