×

வித்தியாசமான தேரோட்டங்கள்

நன்றி குங்குமம் ஆன்மீகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் ஒருசேரக் காட்சியளிக்கின்றனர். இந்திரன் புனிதம் அடைந்த ஸ்தலம் இது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 10 நாட்கள் மார்கழித் திருவிழா மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படும். விழாவின் மைய நிகழ்வான தேரோட்டம் 9-ஆம் திருவிழாவன்று. சுவாமி தேர், அம்மன் தேர், விநாயகர் தேர் ஆகிய மூன்று தேர்கள், 4 வீதிகளில் பவனிவரும்.

இதில் அம்மன் தேரைப் பெண்கள் மட்டுமே இழுத்து வருவார்கள். பொதுவாகக் கோயில்களில் நடக்கும் தேரோட்டத்தைப் பார்க்க பல தரப்பட்ட மக்கள் வந்து கண்டுகளிப்பார்கள். ஆனால், சுசீந்திரம் தேரோட்டத்தில் புதுமணத் தம்பதிகள் அதிகமானோர் கலந்து கொள்வார்கள். இது இங்கு மட்டுமே நடக்கும் சிறப்பு. இந்த தேரோட்டத்தில், கலந்துகொண்டு தாணுமாலயசாமியை தரிசனம் செய்தால், தங்களது இல்லற வாழ்க்கை சிறக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக, திருவிழாவில் ஏராளமான புதுமணத் தம்பதிகள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்வர்.

இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியில் சந்தனக் கடை மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கே மாரி, காளி, காட்டேரி அம்மன்கள் முப்பெரும் தேவியர்களாக அருள் பாலிக்கிறார்கள். இங்கே காளியம்மன் சாந்தமாக வீற்றிருப்பாள் என்பது சிறப்பு. மூலஸ்தானத்தில் மாரியம்மன், காளியம்மன் இருவரும் வீற்றிருப்பது தனிச்சிறப்பு. சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடக்கின்றது. அப்போது, அம்மன் வெள்ளை நிறப் புடவை அணிந்து உலா வருவாள். இந்த பிரசித்திபெற்ற தேரோட்டத்தில், தேர் வீதி உலா வரும்போது, பக்தர்கள் தேரின்மீது உப்பை அள்ளிவீசுகின்றனர். உப்புநீரில் கரைவது போல, தங்களது துன்பங்கள் முழுமையாக நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில், கொங்கு மண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில்களில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். மேலும், சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற தலமாகவும், விநாயகப் பெருமான் முருகனை வணங்கும் தலமாகவும் விளங்குகிறது. இத்தல முருகனை, 496 படிகளில் ஏறி தரிசிக்க வேண்டும். நாட்டில் வேறு எந்தக் கோயிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த கோயிலுக்கு உள்ளது. இங்குள்ள முருகப் பெருமான், ஒருவரின் கனவில் தோன்றி ஒரு பொருளை கோயிலில் உள்ள `உத்தரவுப் பெட்டியில்’ வைக்க உத்தரவிடுவாராம்.

அந்த பொருளை மையப்படுத்தியே அந்த ஆண்டு அமையும் என்பது எங்கும் காணமுடியாத சிறப்பு. தைப்பூசத்திலிருந்து 3 நாட்கள் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி மற்றும் தெய்வானையுடன் தேரில் அமர்ந்து மலையைச் சுற்றி வலம் வருவார். அப்போது இப்பகுதியில் உள்ளவர்கள் ஆடு, மாடுகளின் வளம் செழிக்கவும், அவற்றின் ஆரோக்கியம் மேம்படும் ‘‘அதிர் வெடி’’ போடும் வழக்கமும் உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் ஆலயம், சுமார் 1600 ஆண்டுகள் பழமையான ஆலயமாகும். இந்த கோயில் ஒரு குடைவரை கோயிலாகும். இந்த வகை கோயில்களைக் கட்டுவதில் சிறந்தவர்களாக விளங்கியவர்கள் பல்லவ மன்னர்கள். அவர்கள் வழி வந்த மகேந்திர வர்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதே இந்த கோயில் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இங்கே விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். 9-ஆம் நாள் தேர் வீதி உலா நடக்கும். அந்தத் தேரில் இரண்டு வடங்கள் விடப்படும். ஒரு வடத்தை ஆண்களும், மற்றொரு வடத்தை பெண்களும் வடம் பிடித்து இழுப்பார்கள்.

இந்த தேரோட்டத்தில் வரும் சண்டிகேஸ்வரர் தேரை பெண்களும், குழந்தைகளும் மட்டுமே இழுப்பார்கள். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோயில். வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள நான்காவது திருத்தலமான இது, வாயுலிங்கத் தலமாகும். இங்கு அருள்மிகு பெரிய நாயகி உடனுறை அருள்மிகு காமநாதீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

1190 முதல் 1260 வரையான காலத்தில் மகத தேசத்தை ஆண்ட வாணகோவரையர் ஆறகழூரில் மிகப் பிரம்மாண்ட அளவில் தேர்த் திருவிழா நடத்துவதை தங்களது பெருமையாக கருதினர். இங்கு தேரோட்டம் ராஜவீதியில் பங்குனி உத்திர திருவிழாவின் போது பெரிய நாயகி சமேத காமநாதீஸ்வரர், பூங்குழலி சமேத ஸ்ரீசோழவேழ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூ தேவி சமேத கரிவரத பெருமாள் என்ற வைணவ ஆலய தேரும் சேர்ந்து வருவது இங்கு மட்டுமே நடக்கும் அதிசயம்.

திருச்சியில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள திருவெள்ளரை புண்டரிகாட்ச பெருமாள் கோயில் தென்னாட்டில் முதல் வைணவத்தலம். இக்கோயிலின் முழு உரிமையும் இங்குள்ள செங்கமலவல்லி தாயாருக்குத்தான். இக்கோயில் பங்குனி தேர்உலாவில், முதலில் செல்வது தாயார் தேர்தான். அதன் பிறகுதான் பெருமாள் தேர் செல்லும். வீதி உலா முடிந்தவுடன் தாயார் அனுமதி பெற்ற பிறகே பெருமாள் கோயிலில் நுழைய முடியும். இதில் மார்ச் – ஏப்ரலில் நடத்தப் படும் தேர்த் திருவிழா மிகவும் முக்கியமானது. பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு சமூக விருந்து வழங்கப்படும் என்பதால், இந்த திருவிழா மாநிலத்தில் தனித்துவமானது.

தொகுப்பு: கோவீ. ராஜேந்திரன்

The post வித்தியாசமான தேரோட்டங்கள் appeared first on Dinakaran.

Tags : Susinthram Thanumalayan Swamy Temple ,Kanyakumari district ,Shiva ,
× RELATED நிதி வசதி எப்படி இருக்கும்?