×

குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 13 காவலர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி அலுவலகம் உத்தரவு

சென்னை: குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 3 உதவி ஆய்வாளர் உட்பட 13 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையர் பரிந்துரையின் பேரில் டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா, கூலிப், பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அதனை 4 மடங்கு விலையேற்றி விற்பனை செய்யப்படுகிறது. அதிக லாபம் கிடைப்பதால் அதனை ஏராளமான பெட்டிக்கடை காரர்கள் சட்டவிரோத விற்பனை செய்து வந்தார்கள்.

அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி கைது நடவடிக்கை எடுத்து வந்தாலும் சிறு, சிறு கடைகள், ஜூஸ் கடைகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் வந்து செல்லும் கடைகளில் குட்கா பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக ஆவடி காவல் ஆணையருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் ஆவடி காவல் ஆணையர் சங்கர், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, எண்ணூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் குட்கா, கூலிப், மாவா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிரடி சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில், 117 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. 23 கடைகள் சீல் வைக்கப்பட்டு ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் காவலர்கள் சிலர் இவர்களுக்கு உதவி செய்ததும், விற்பனையை கண்டுகொள்ளாமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனால் கடந்த 21ம் தேதி தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் என 26 போலீசாரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 26 பேரில் 3 உதவி ஆய்வாளர்கள், 10 காவலர்கள் உள்ளிட்ட 13 போலீசாரை, ஆவடி காவல் ஆணையர் பரிந்துரையின் பேரில் வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

The post குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 13 காவலர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி அலுவலகம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kudka ,TGB ,Chennai ,Gutka ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு