×

திருவண்ணாமலை தீபத்திருவிழா 8ம் நாள்: குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் பவனி; விடிய விடிய நடந்த தேரோட்டம்


திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று காலை தொடங்கிய தேரோட்டம் இன்று அதிகாலை வரை நடந்தது. விடியவிடிய லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 8ம்நாளான இன்று காலை குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் பவனி நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ம்நாளான நேற்று மகா தேரோட்டம் நடந்தது. 5 ரதங்கள் மாடவீதியில் பவனி வந்தன. விநாயகர், சுப்பிரமணியர் ேதர்கள் பவனி வந்தன. 3வதாக ‘மகாரதம்’ என்றழைக்கப்படும் பெரிய தேர் மாலை 5 மணியளவில் புறப்பட்டது. இதில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பவனி வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என பக்தி பரவசத்துடன் தேரை இழுத்தனர்.

மாட வீதிகளில் அலைகடலென திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் மெல்ல மெல்ல நீந்தியபடி, மகாரதம் வந்தது. மகா ரதத்தின் மீது பக்தர்கள் மலர்களை தூவி வணங்கினர். மகா ரதம் இரவு 11.45 மணியளவில் நிலையை அடைந்தது. அதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் அம்மன் தேர் பவனி புறப்பட்டது. அலங்கார ரூபத்தில் பராசக்தி அம்மன் தேரில் எழுந்தருளி பவனி வந்தார். அம்மன் ேதரை முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தேரோட்டத்தின் நிறைவாக சண்டிகேஸ்வரர் தேர் மாடவீதியில் பவனி வந்தது. இன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. மகா தேரோட்டம் நேற்று காலை தொடங்கி இன்று அதிகாலை வரை நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.

தீபவிழாவின் 8ம் நாளான இன்று காலை வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் பவனி வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாயா’, ‘அரோகரா’ என்று பக்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து இன்று மாலை சுமார் 4 மணியளவில் தங்கமேரு வாகனத்தில் பிச்சாண்டவர் உலா நடக்கிறது. இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர், குதிரை வாகனத்தில் சுப்பிரமணியர், பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், குதிரை வாகனத்தில் பராசக்தி அம்மன், குதிரை வாகனத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் நாளைமறுநாள் மாலை 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை மீது ஏற்றப்பட உள்ளது. முன்னதாக அன்று அதிகாலை கோயிலில் பரணி தீபம் ஏற்றபடும். இதில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக அரசு சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

The post திருவண்ணாமலை தீபத்திருவிழா 8ம் நாள்: குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் பவனி; விடிய விடிய நடந்த தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai Deepatri Festival Day 8 ,Chandrasekhar Bhavani ,Tiruvannamalai ,Tiruvannamalai Kartika Deepatri Festival ,Tiruvannamalai Deepatri Festival ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...