×

ஜோலார்பேட்டை அடுத்த பச்சூர் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் மேம்பாலம் அமைக்கும் பணி

*ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் மாணவர்கள்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அடுத்த பச்சூர் ரயில் நிலையத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அங்கு பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பச்சூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பச்சூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்திற்கும் மள்ளானூர் ரயில் நிலையத்திற்கும் இடையே பச்சூர் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். மேலும், மாணவர்கள் தங்களது சைக்கிள்களை தண்டவாளத்தின் குறுக்கே தள்ளிச்செல்கின்றனர்.

இவ்வழியாக செல்லும் ரயில்கள் சிக்னல் கிடைக்காமல் திடீரென நின்று விடுவதால் ரயில் பெட்டியின் மீது ஏறியும், ஆபத்தான முறையில் ரயில் பெட்டியின் கீழ் பகுதியில் நுழைந்தும் மாணவர்கள் கடந்து செல்கின்றனர். இதுபோன்ற சமயத்தில் சிக்னல் கிடைத்து ரயில் புறப்பட்டால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு மாற்றுப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புதிதாக கட்டப்பட்ட வரும் ரயில்வே மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியுள்ளதாவது: ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போதிய பாதை வசதி இல்லாததால் இருப்பு பாதையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் சைக்கிள்களில் தள்ளியபடி மாணவர்கள் செல்கின்றனர். அதிவேகமாக வரும் ரயில்கள் அருகே செல்லும்போது காற்று மற்றும் ஈர்ப்பு காரணமாக எவ்விதமான அசம்பாவிதமும் நடக்கும் சூழல் உள்ளது.

குறிப்பாக வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்களின் அருகே காத்திருந்து மாணவர்கள் இருப்பு பாதையை கடந்து செல்கின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் அச்சத்துடனேயே மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம். மாற்றுப்பாதை வசதி இல்லாததால் வேறு வழியின்றி தண்டவாளத்தை கடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மேம்பாலம் அமைக்கும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஜோலார்பேட்டை அடுத்த பச்சூர் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் மேம்பாலம் அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Pachur railway station ,Jolarpet ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி