×

கோவை மாவட்டத்தில் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

*வினாடிக்கு 3,200 கனஅடி நீர் செல்கிறது

கோவை : கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. தவிர, மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, கவுண்டம்பாளையம், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும், நேற்று காலையிலும் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என பலர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பலத்த மழையின் காரணமாக காரமடை ஒன்றியத்தில், மேட்டுப்பாளையம் உட்பட 193 பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை சிறுவாணி அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது நொய்யல் ஆற்றில் விநாடிக்கு 3,200 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில் அதிகளவிலான தண்ணீர் வரத்து காணப்பட்டது. பேரூர் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால், குனியமுத்தூர் தடுப்பணை, சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை, புட்டுவிக்கி தடுப்பணைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பல்வேறு இடங்களில் தரைப்பாலத்தை கடந்து மழை வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது. இதனை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். புதுக்குளம், உக்குளம், கோளராம்பதி, நரசாம்பதி, குமாரசாமி, செல்வசிந்தாமணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளவை எட்டியது. குளத்திற்கு செல்லும் ராஜவாய்க்கால், தடுப்பணைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது தவிர, தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் பெய்த கனமழையால் கணுவாய் தடுப்பணையை தாண்டி அங்கிருந்து சங்கனூர் ஓடை, சின்ன வேடம்பட்டி ஏரிக்கு ராஜாவாய்க்கால் மூலம் மழைநீர் சென்று கொண்டிருக்கிறது. வெள்ளக்கிணறு குட்டை இரண்டாவது முறையாக நிரம்பியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சென்று கொண்டு இருக்கிறது. மாவட்டம் முழுவதும் உள்ள தடுப்பணைகள், குளங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தொடர்ந்து இன்றும், நாளையும் கன‌ மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் அலார்ட் செய்யப்பட்டு உள்ளது. வெள்ளப் பாதிப்புகளால் சேதம் ஏதாவது ஏற்பட்டு உள்ளதா? என்பதை கண்காணிக்கவும், அது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 1,013 மிமீ மழை

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 1,013 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 373 மிமீ மழையும், அன்னூர் 12.40 மிமீ, சின்கோனா 23 மிமீ, சின்னகல்லார் 26 மிமீ, வால்பாறை 27 மிமீ, வால்பாறை தாலுகா 28 மிமீ, சோலையார் 15 மிமீ, ஆழியாறு 15 மிமீ, பொள்ளாச்சி 17.40 மிமீ, கோவை தெற்கு 10.50 மிமீ, பீளமேடு 14.80 மிமீ, வேளாண் பல்கலை 61.80 மிமீ, பெரியநாயக்கன்பாளையம் 93.80 மிமீ, பில்லூர் அணை 78 மிமீ, தொண்டாமுத்தூர் 46 மிமீ, சிறுவாணி அடிவாரம் 99 மிமீ, மதுக்கரை 15 மிமீ, போத்தனூர் 17 மிமீ, மக்கினாம்பட்டி 6 மிமீ, கிணத்துக்கடவு 12 மிமீ, ஆனைமலை 22 மிமீ என மொத்தம் 1,013 மிமீ மழை பதிவாகியுள்ளது.

கலெக்டர் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், பழுதடைந்த கூரை வீடுகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள், மழையினால் ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால், பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ, செல்பி எடுக்கவோ அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

The post கோவை மாவட்டத்தில் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Noyyal river ,Coimbatore district ,Coimbatore ,Northeast ,Noyal River ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்