×

முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு கடன் தொல்லையால் அக்கா, தங்கை தற்கொலை

*அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு: புதுச்சேரியில் சோக சம்பவம்

புதுச்சேரி : புதுச்சேரி கிருஷ்ணா நகரில் முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, கடன் தொல்லையால் அக்கா, தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அழுகிய நிலையில் இருவரது சடலங்களும் மீட்கப்பட்டன. புதுச்சேரி கிருஷ்ணா நகர், எழில் நகர் வடக்கு அய்யனார் கோயில் வீதியை சேர்ந்தவர்கள் பூங்காவனம் (60), வைதேகி (50). பிரெஞ்சு குடியுரிமை பெற்ற நபருக்கு சொந்தமான அந்த வீட்டின் முதல் மாடியில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். தரைதளத்தில் உரிமையாளரின் வீடு உள்ளது. அவர், பிரான்சில் வசிப்பதால் அந்த வீடு எப்போதும் பூட்டப்பட்டு இருக்கும். புதுச்சேரிக்கு வரும்போது தான் அவர் வீட்டில் தங்குவார்.

பூங்காவனம், வைதேகி இருவருக்கும் ஒரே கணவர் தான். அவர், விசாகப்பட்டினத்தில் வேலை செய்து வருகிறார். அக்கா, தங்கை இருவரும் புதுச்சேரி கிருஷ்ணா நகர் 12வது குறுக்கு தெருவில் ஓட்டல் நடத்தி வந்தனர். இதற்காக அதிக வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். மொத்தம் ரூ.20 லட்சம் அளவுக்கு கடன் அதிகமாகி உள்ளது. ஆனால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள், பணத்தை திரும்பக் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

கணவரும், கடந்த 4 ஆண்டுகளாக எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.
கடன் தொல்லையால் அவதிப்பட்ட அக்கா, தங்கை இருவரும் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனால் கடந்த 19ம் தேதி இரவு, பூங்காவனம் விஷம் குடித்தும், வைதேகி மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டும் தற்கொலை செய்து கொண்டனர். வீடு 3 நாட்களாக பூட்டப்பட்டு கிடந்தது. இருவரும் தனிமையால் வசித்து வந்ததால் இது தெரியவில்லை.

இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் இதுபற்றி லாஸ்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அன்வர் பாஷா மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாற்று சாவி மூலமாக வீட்டை திறந்து உள்ளே சென்றனர். அங்கு வைதேகி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும், பூங்காவனம் வீட்டின் ஹாலிலும் இறந்து கிடந்தனர். இறந்து 3 நாட்களக்கு மேல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. சடலங்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்வதற்கு முன், இருவரும் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளனர். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதம், முதல்வர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை, ஜான்குமார் எம்எல்ஏ ஆகியோருக்கு எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், கடன் ெதால்லை ஆகி விட்டது. ஓட்டல் நடத்தி நஷ்டமாகி விட்டது. வீட்டு வாடகை கட்ட முடியவில்லை. எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. இதனால் நாங்கள் 2 பேரும் தற்கொலை செய்து கொள்கிறோம் என உருக்கமாக எழுதி, அதன் கீழே இருவரும் கையெழுத்து போட்டுள்ளனர். கடன் தொல்லையால் அக்கா, தங்கை இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு கடன் தொல்லையால் அக்கா, தங்கை தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangaswamy ,Puducherry Puducherry ,Rangasamy ,Puducherry Krishna Nagar ,Dinakaran ,
× RELATED நியாய விலை கடைகளை திறக்க மக்கள்...