×

அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகளுக்குப் பின்னால் புதிய வைரஸ் இல்லை.. : சீன சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ விளக்கம்!!

ஜெனீவா: சீனாவில் மர்ம காய்ச்சல் வேகமாகப் பரவி வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை கேட்ட நிலையில், அதற்கு சீன அரசு அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாக சிறுவர்கள் புது வகையான காய்ச்சலால் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. மேலும் சுவாச பிரச்னைகளையும் பலர் எதிர்கொண்டுவருவதாகவும் கூறப்படுகின்றது. கடந்த 13ம் தேதி சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரிகள் சுவாச நோய்கள் அதிகரித்துள்ளதாக அறிவித்தனர். மேலும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும், மற்ற நாடுகளிலும் இதுபோன்ற சுவாசப் பிரச்னை மற்றும் சுவாச நோய் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்னைகள் குறித்து உலக சுகாதார அமைப்பானது சீனாவிடம் நேரடியாக விளக்கம் கேட்டது. நேற்று முன்தினம் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அக்டோபர் நடுவில் இருந்து வடக்கு சீனாவில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீன அதிகாரிகள் அறிவித்துள்ள சுவாச நோய் தொற்று அதிகரிப்புக்கும் காய்ச்சலுக்கும் தொடர்புடையாதா என்பது தெளிவாக தெரியவில்லை. தற்போது இருக்கும் வைரஸ்கள், சுவாச நோய்கள் மற்றும் காய்ச்சல், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்கள் குறித்து சீனாவிடம் அதிகாரப்பூர்வமாக கேட்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள சீன அரசு, அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகளுக்குப் பின்னால் புதிய வைரஸ் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் பீஜிங், லையானிங் பகுதிகளில் புதிய நோய் பரவல் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் ஏற்கனவே அறியப்பட்ட நோய்க்கிருமிகளால் ஏற்படும் சுவாச நோய்கள் அதிகரித்துள்ளது என்றும் சீன சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

The post அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகளுக்குப் பின்னால் புதிய வைரஸ் இல்லை.. : சீன சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ விளக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Chinese Ministry of Health ,Geneva ,World Health Organization ,China ,Dinakaran ,
× RELATED கொரோனாவை விட கொடூரமான ‘டிசீஸ் எக்ஸ்’...