×

ஜோஷ் இங்லிஸ் சதம் வீண் இந்திய அணி த்ரில் வெற்றி

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியா அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்தியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஒய்எஸ்ஆர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் முதலில் பந்துவீச முடிவு செய்தார். தொடக்க வீரர் ஷார்ட் 13 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து ஸ்மித்துடன் ஜோஷ் இங்லிஸ் ஜோடி சேர்ந்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தார். இங்லிஸ் 29 பந்தில் அரைசதம் அடிக்க, ஸ்மித் 40 பந்தில் 50 ரன்னை எட்டினார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்தனர். ஸ்மித் 52 ரன் எடுத்து (41 பந்து, 8 பவுண்டரி) ரன் அவுட்டானார். மிரட்டலாக விளையாடிய இங்லிஸ் 47 பந்தில் சதம் அடித்து அசத்தினார். அவர் 110 ரன் (50 பந்து, 11 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி பிரசித் கிருஷ்ணா வேகத்தில் ஜெய்ஸ்வால் வசம் பிடிபட்டார். ஆஸ்திரேலியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கெய்க்வாட் ரன் எதுமின்றி ரன் அவுட்டாக, ஜெய்ஸ்வால் 21 ரன்னில் வெளியேறினார். இதன் பின்னர் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஜோடி அட்டகாசமாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்தது. இஷான் கிஷன் 39 பந்தில் 58 ரன் (5 சிக்சர், 2 பவுண்டரி), சூர்யகுமார் யாதவ் 42 பந்தில் 80 ரன் (4 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 2 ரன் அவுட் உட்பட அடுத்தடுத்து 3 விக்கெட் இழந்தாலும், கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் நோ-பால் வீசப்பட இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. ரிங்கு சிங் 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

The post ஜோஷ் இங்லிஸ் சதம் வீண் இந்திய அணி த்ரில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Josh Inglis ,VISAKHAPATNAM ,INDIA ,AUSTRALIA ,YSR Stadium ,Sadam Vein ,Indian Team ,Dinakaran ,
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் முதல் டி20 11 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி