×

65 வயதை கடந்தும் ரேஷன் கார்டு பெற முடியாமல் தவிக்கும் தம்பதி

 

பாப்பிரெட்டிப்பட்டி, நவ.24: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, 65வயதை கடந்தும் ரேஷன் கார்டு கிடைக்காமல் சிரமப்படும் மலைவாழ் தம்பதிக்கு, மாவட்ட நிர்வாகம் உதவி கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பட்டுக்கோணம்பட்டி ஆவாரங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி(65). இவரது மனைவி வெள்ளையம்மாள் (60). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவரை வெளியூரில் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். மலைவாழ் இனத்தை சேர்ந்த இந்த தம்பதிக்கு, எழுத படிக்க தெரியாது. தங்களுக்கு சொந்தமாக சிறிய விவசாய நிலத்தில் வேலை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதிக்கு கடந்த 40 ஆண்டுகளாக ரேஷன் அட்டை இல்லாததால், அரிசி, பருப்பு, எண்ணை மற்றும் அரசின் நல திட்டங்கள் போன்றவற்றை பெற முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக தர்மபுரி கலெக்டர் அலுவலகம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மனு கொடுத்து, நடையாய் நடந்தும் ரேஷன் கார்டு வாங்க முடியவில்லை என வேதனை தெரிவித்தனர். இந்த தம்பதியினருக்கு ஆவாரம்காட்டூர் பகுதியில் வீடு கட்டி வாழ்ந்து வருவதற்கான வீட்டு வரி ரசீதும், ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. இருவருக்கும் ஆதார் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை, வீட்டு வரி ரசீது போன்றவை இருந்தும், இவர்களுக்கு இதுவரை ரேஷன் கார்டு வழங்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம், இந்த வயதான தம்பதியரின் கோரிக்கையை பரிசீலனை செய்து, உடனடியாக ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post 65 வயதை கடந்தும் ரேஷன் கார்டு பெற முடியாமல் தவிக்கும் தம்பதி appeared first on Dinakaran.

Tags : Pappirettipatti ,
× RELATED பறிமுதல் செய்த ₹96 ஆயிரம் திரும்ப ஒப்படைப்பு