×

வண்ணாரப்பேட்டை துணிக்கடைகளில் 5 குழந்தை தொழிலாளர் மீட்பு: உரிமையாளர்கள் மீது போலீசில் புகார்

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை துணிக்கடைகளில் இருந்து 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் துறை மற்றும் சென்னை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவினர் நேற்று வண்ணாரப்பேட்டை ஜி.ஏ ரோடு, எம்.சி ரோடு ஆகிய பகுதியில் உள்ள துணிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரவீன் டெக்ஸ்டைல், சந்தீப் டெக்ஸ்டைல், பனாரஸ் சாரி, ஹமிர்த் டெக்ஸ்டைல் ஆகிய கடைகளில் 5 சிறுவர்கள் குழந்தை தொழிலாளர்களாக வேலை பார்த்தது தெரியவந்தது.

இதனையடுத்து குறிப்பிட்ட அந்த 4 கடைகளில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் மற்றும் ராஜஸ்தான், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டு, ராயபுரத்தில் உள்ள சிறுவர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு பிரிவினர் வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய காவல் நிலையங்களில் கடை உரிமையாளர்கள் மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகையையொட்டி இதே பகுதியில் பா.ஜ நிர்வாகிக்கு சொந்தமான துணிக் கடையில் சோதனை மேற்கொண்டு 4 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post வண்ணாரப்பேட்டை துணிக்கடைகளில் 5 குழந்தை தொழிலாளர் மீட்பு: உரிமையாளர்கள் மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Vannarpet ,Thandaiyarpet ,Vannarappet ,Dinakaran ,
× RELATED மாவா பதுக்கி விற்ற 3 பேர் கைது: 150 கிலோ மாவா, ஜர்தா பறிமுதல்