×

ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு ரதம்: கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் இன்று முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆண்களும் குடும்ப நலத்தில் பங்கேற்கும் பொருட்டு ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்த அரசால் இரு வார விழிப்புணர்வு விழா ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு குடும்ப நலத்துறையின் மூலம் தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இச்சிறப்பு குடும்ப நல ஆண் கருத்தடை முகாம்கள் நடத்திட மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆண்களுக்கான இந்த கருத்தடை முறை, பெண்களுக்கான கருத்தடை முறையை விட எளிமையானது. மயக்க மருந்து கொடுப்பதில்லை. கத்தியின்றி ரத்தமின்றி செய்யப்படுகிறது. தையல் இல்லாததால் தழும்பு தெரியாது. மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமும் இல்லை. சிகிச்சை முடிந்தவுடன் வீட்டிற்கு செல்லலாம்.

2 மணி நேரத்திற்கு பின்னர் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம். இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு குடும்ப நல கருத்தடை முறையை ஏற்கும் ஒவ்வொரு பயனாளிக்கும் ஈட்டுத்தொகையாக அரசால் ரூ.1,100 வழங்கப்படும். இச்சிறப்பு முகாமில் குடும்ப நலம் ஏற்கும் ஆண்களுக்கு மாவட்டம் வழங்கும் ஊக்கத்தொகை ரூ.3,900 சேர்த்து ரூ.5,000 வழங்கப்படும். மேலும், ஊக்குவிப்பாளருக்கு ரூ.200 வழங்கப்படும்.

இதனை தகுதியுள்ள தந்தையர்கள் ஏற்பதன் மூலம் சிறுகுடும்ப நெறியை பின்பற்றலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் இருவாரம் நடைபெறும் ஆண்களுக்கான நவீன குடும்ப அறுவை சிகிச்சை முகாம் குறித்த விழிப்புணர்வு ரதத்தை நேற்று மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் (பொ) சேகர், துணை இயக்குநர்கள் (திருவள்ளூர்) ஜவஹர்லால், (பூந்தமல்லி) செந்தில்குமார் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு ரதம்: கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tiruvallur district ,
× RELATED சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக...