×

மாநகராட்சி பள்ளிகளில் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக மேயர் தலைமையில் ஆய்வு கூட்டம்: உயர்மட்ட பிரதிநிதிகள் குழு பங்கேற்பு

சென்னை: சென்னை பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மேயர் பிரியா தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவியுடன், சிட்டிஸ் திட்டத்தின் கீழ், சென்னை பள்ளிகளை நவீன வசதிகளுடன் தரம் உயர்த்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மேயர் பிரியா தலைமையில் ஏ.எப்.டி மற்றும் என்.ஐ.யு.ஏ உயர்மட்ட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினருடன் கலந்துரையாடல் கூட்டம், ரிப்பன் மாளிகை அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், மேயர் பிரியா சிட்டிஸ் திட்டத்தின் கீழ், 28 சென்னை பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் ஏ.எப்.டி மற்றும் என்.ஐ.யு.ஏ உயர்மட்ட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினருடன் விரிவாக கலந்துரையாடினார்.

பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் நிலைத்திருத்தலுக்கான நகர முதலீடுகள் திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியுடன் சென்னை சீர்மிகு நகர திட்டம் ஆகியவை இணைந்து 28 சென்னை பள்ளிகளில் கட்டிட உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் மின்னாளுமை உருவாக்குதல், நவீன முறைகளில் கல்வி கற்பித்தல், ஆசிரியர்களுக்கான கற்பிக்கும் திறனை மேம்படுத்துல், மாணவர்களின் கலை மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்துதல், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல் போன்ற 6 முக்கிய காரணிகளைக் கொண்டு முழுவதுமாக நவீன வசதிகளுடன் மேம்படுத்த முதற்கட்டமாக ரூ.95.25 கோடி மதிப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிரான்ஸ் மேம்பாட்டு முகமையின் சார்பில் ரூ. 76.20 கோடி கடன் உதவியாக ஏற்கனவே வழங்கப்பட்டு, சென்னை மாநகராட்சியின் 18 இடங்களில் அமைந்துள்ள 28 சென்னை பள்ளிகள் முழுமையாக நவீன வசதிகளுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், சிறந்த விளையாட்டு கட்டமைப்புகள், கழிவறைகள், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள், சிறப்பு விளையாட்டுப் பயிற்சிகள், ஸ்டெம் ஆய்வகங்கள் மற்றும் மொழி சார்ந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சிட்டிஸ் Challenge-ல் வென்ற இந்தியாவின் 12 நகரங்களில், சென்னை சிறந்த செயல்திறன் கொண்ட நகரங்களில் ஒன்றாக விளங்கிய காரணத்தினால், தேசிய நகர்ப்புர விவகாரங்கள் நிறுவனம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஆகியவை கூடுதலாக ரூ.36 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சிக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் நிதியின் மூலம் மாநகராட்சியில் உள்ள மேலும் 11 பள்ளிகள் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்படும். இக்கூட்டத்தில், ஆணையாளர் ராதாகிருஷ்ணன், இணை ஆணையாளர் (பணிகள்) சமீரன், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, AFD மற்றும் NIUA குழுவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் ஜூலியட் லி பன்னேரர், டயானே பிட்டர், நாயிம் கெருவாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

The post மாநகராட்சி பள்ளிகளில் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக மேயர் தலைமையில் ஆய்வு கூட்டம்: உயர்மட்ட பிரதிநிதிகள் குழு பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Mayor ,Priya ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மேயர் பிரியா கண்டனம்