×

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெண்கள் பெற்று தருவார்கள்: கரு.பழனியப்பன் பேச்சு

பெரம்பூர்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டு பெண்கள் பெற்று தருவார்கள் என்று ஓட்டேரியில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பேசியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்டம், திருவிக நகர் வடக்கு பகுதி திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஓட்டேரியில் நேற்று முன்தினம் மாலை, ‘கதை, திரைக்கதை, வசனம் கலைஞரே என்றைக்கும் சிகரம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை வகித்தார். அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் திரைப்பட நடிகை குட்டி பத்மினி, திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினர். கலாநிதி வீராசாமி எம்பி, திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பேசியதாவது: கலைஞர் தனது எழுத்தால் அரசியலுக்கு வருவதற்கு முன்பே சொந்த வீடு வாங்கியவர். மேலும், திராவிட இயக்க தலைவர்களில் முதலில் கார் வாங்கியவர் கலைஞர்தான். நடிகராக சிவாஜி 250 ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்தில், எழுத்தாளராக, வசனகர்த்தாவாக 500 ரூபாய் சம்பளம் வாங்கியவர் கலைஞர். அவர் 500 ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்தில் தங்கத்தின் விலை கிராம் 10 ரூபாய் தான். கலைஞரை செல்வந்தனாக மாற்றியது தமிழ் சினிமா. பிறகு தான் அவர் குழித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.

கலைஞர், மக்களை அறிந்து மக்களோடு தொடர்பிலிருந்தவர். அதனால்தான் மக்கள் மனதை அவர் வென்றார். கலைஞரின் இறப்பிற்கு தமிழகத்தின் கட்சி சார்பின்றி அனைத்து தரப்பட்ட மகளிரும் கண்ணீர் வடித்தார்கள். ஏனென்றால் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொண்டு வந்தவர் என்பதை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருந்தனர். கலைஞர் வழியில் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் உழைக்கிறார். பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை முதலில் அறிமுகபடுத்தியவர் நம் முதல்வர். மகளிருக்கு ரூ.1,000 திட்டம் போன்று எண்ணற்ற திட்டங்களை தமிழக மகளிருக்காக ஒதுக்கி செயலாற்றுகிறார் நம் முதல்வர். மேலும், எம்.ஜி.ஆரை விட முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழகத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. அதற்கு இன்றைய கூட்டமே சாட்சி. இனி எத்தனை ஆட்சி வந்தாலும் மகளிர்க்கு இலவச பேருந்து திட்டத்தை ரத்து செய்ய முடியாது. இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுகவிற்கு தமிழ்நாட்டு பெண்கள் பெற்றுத் தருவார்கள். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், வர்த்தகரணி அமைப்பாளர் உதயசங்கர், மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

The post வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெண்கள் பெற்று தருவார்கள்: கரு.பழனியப்பன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK ,Karu Palaniappan ,Perambur ,Tamilnadu ,Otteri ,
× RELATED சாலைகளில் ஆணியை புதைக்கிறது பாஜ அரசு...