×

பிரபல கிளினிக்கில் இருந்து முக்கிய தகவல்களை திருடி நூதன மோசடி: ஊழியர் கைது

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள கிளினிக்கில் இருந்து முக்கிய தகவல்களை திருடி, தனியாக கோவை, சேலத்தில் கிளைகள் அமைத்து மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். நுங்கம்பாக்கம் நாகேஸ்வர ராவ் சாலையை சேர்ந்தவர் அனிந்தம் சுமந்தா (46). அதே பகுதியில் உள்ள ‘அட்வான்ஸ் ஜிஆர்ஓ ஹார்’ என்ற பெயரில் இயங்கும் கிளினிக்கில் தலைமை அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த வாரம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எங்கள் கிளினிக்கில் வேலை செய்து வந்த பிரேமலதா, கிஷோர், பாலகிருஷ்ணன் ஆகியோர் எங்கள் கிளினிக்கில் வியாபார உத்திகள், நிறுவனத்தின் கிளைகள் மற்றும் வாடிக்கையாளர்கள் தகவல்களை திருடி தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, சேலம் மாவட்டம் நாராயணசாமி நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (35) பிரேமலதா, கிஷோர் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, வேலை செய்த கிளினிக்கில் வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை திருடி, தனியாக ‘ஆரா’ என்ற பெயரில் கோவை மற்றும் சேலத்தில் புதிதாக கிளைகள் தொடங்கி மோசடி செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து முக்கிய குற்றவாளியான பாலகிருஷ்ணனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து கிளினிக்கின் டேட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள பிரேமலதா மற்றும் கிஷோரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

 

The post பிரபல கிளினிக்கில் இருந்து முக்கிய தகவல்களை திருடி நூதன மோசடி: ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Nungambakkam ,Coimbatore ,Salem ,
× RELATED சென்னை நகரின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை