×

ஜம்முவில் 4 ராணுவ அதிகாரிகளை கொன்ற 2 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: துப்பாக்கிச் சண்டையில் மேலும் ஒரு வீரர் பலி

ரஜோரி: ஜம்முவில் 4 ராணுவ அதிகாரிகளை சுட்டுக் கொன்ற 2 லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உட்பட 2 தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் நேற்று சுட்டுக்கொன்றனர். துப்பாக்கிச் சண்டையில் மேலும் ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரில் எல்லையோர மாவட்டங்களில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீவிரவாதிகள் நடமாட்டம் மற்றும் தீவிரவாத சம்பவங்கள் அதிகரித்து வந்தன. தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு ராணுவம் மற்றும் போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாஜிமால் பகுதியில் தீவிரவாதிகள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் வீரர்கள் அங்கு விரைந்தனர்.

தீவிரவாதிகளை வீரர்கள் சுற்றி வளைக்க முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் சிறப்பு படையின் 2 ராணுவ கேப்டன்கள் உட்பட 4 ராணுவ அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர். 2 வீரர்கள் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே மீண்டும் துப்பாக்கி சண்டை தொடங்கியது. வீரர்களின் துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் சுட்டதில் மேலும் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த கமாண்டர் குவாரி என்பதும் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. இவன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவன் . ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதியில் தங்களது குழுவினருடன் இணைந்து கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான். டாங்கிரி மற்றும் கண்டி தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது. ரஜோரியில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்காக அனுப்பப்பட்டவன் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்றொரு தீவிரவாதி யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

* வெடிப்பொருட்கள் பறிமுதல்
ஜம்முவின் அக்னூர் செக்டார் பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் நேற்று காலை ராணுவம் மற்றும் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது டிரோன் மூலமாக பெட்டி ஒன்று வீசப்பட்டு கிடந்தது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. பின்னர் அதில் இருந்த 9கையெறி குண்டுகள், பிஸ்டல், வெடிப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. தீவிரவாதிகள் பயன்படுத்துவதற்காக டிரோன் மூலமாக வெடிப்பொருட்கள் வீசப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

The post ஜம்முவில் 4 ராணுவ அதிகாரிகளை கொன்ற 2 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: துப்பாக்கிச் சண்டையில் மேலும் ஒரு வீரர் பலி appeared first on Dinakaran.

Tags : Lashkar ,Jammu ,Rajouri ,-e-Taiba ,Dinakaran ,
× RELATED ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி