×

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் இன்று மீட்கப்படுவார்கள்: மீட்பு பணி தாமதத்திற்குப் பின் அதிகாரிகள் நம்பிக்கை

உத்தர்காசி: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் இன்று காலை மீட்கப்பட்டு விடுவார்கள் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் கூறி உள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வரும் 4.5 கிமீ சுரங்கப்பாதையின் ஒரு பகுதி கடந்த 12ம் தேதி திடீரென இடிந்தது. இதில், சுரங்கப்பாதைக்குள் பணியாற்றிக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, சுரங்க இடிபாடிபாடுகளில் 57 மீட்டர் தூரத்திற்கு துளையிட்டு 6 அங்குல குழாயை நுழைத்து அதன் மூலமாக தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து பொருட்கள் அனுப்பப்பட்டன. இதன் வழியாக கேமரா அனுப்பி, 41 தொழிலாளர்கள் பத்திரமாக இருப்பதும் காட்டப்பட்டுள்ளது. மீட்பு பணியின் 11வது நாளான நேற்று முன்தினம் சுரங்கத்தில் கிடைமட்டமாக துளையிடும் பணி இறுதிகட்டத்தை எட்டியது. இதனால் நேற்று தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இதனால், உடனடியாக சுரங்கம் உள்ள பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். மேலும், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஒன்றிய சாலை போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங், தேசிய பேரிடர் மீட்பு குழு டைரக்டர் ஜெனரல் அதுல் கர்வால் சில்க்யாரா பகுதிக்கு விரைந்தனர். ஆனால், 45 மீட்டர் துளையிட்ட பிறகு அப்பகுதியில் கடினமான இரும்பு கம்பிகள் குறுக்கிட்டதால் துளையிடும் பணியில் 6 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழாய் வழியாக உள்ளே சென்று கேஸ் கட்டர்கள் மூலம் இரும்பு கம்பிகளை வெட்டி அகற்றினர். அதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் துளையிடும் பணி தொடங்கியது. முதலில் 57 மீட்டருக்கு துளையிடுவதாக இருந்த நிலையில் கூடுதலாக 3 மீட்டர், அதாவது 60 மீட்டர் வரை துளையிட மீட்பு குழுவினர் முடிவு செய்தனர்.

இதற்கிடையே நேற்று மாலை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் அளித்த பேட்டியில், ‘‘இந்த மீட்பு பணி ஒரு போரைப் போன்றது. போரில் எப்போது எதிரி தாக்க வருவான் என்பதை மணிக்கணக்கில் கூற முடியாது. அதுபோலத்தான் இப்பணியிலும் எதையும் துல்லியமாக கூறிவிட முடியாது. தற்போது துளையிடும் பணியில் இன்னும் சில தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் இறுதி கட்டத்தை எட்டிவிட்டோம். இன்னும் சில மணி நேரத்திலோ அல்லது வெள்ளிக்கிழமை (இன்று) காலையிலேயோ சுரங்கத்தில் இருந்து 41 தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள்’’ என்றார்.

 

The post உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் இன்று மீட்கப்படுவார்கள்: மீட்பு பணி தாமதத்திற்குப் பின் அதிகாரிகள் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,National Disaster Management Authority ,Dinakaran ,
× RELATED உத்தராகண்ட் ஹல்த்வானியில்...