×

திட்ட பகுதிகள் அதிகம் உள்ளதால் காஞ்சிபுரம் கோட்ட அலுவலகத்தை வண்டலூருக்கு மாற்ற வேண்டும்: பயனாளிகள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி: காஞ்சிபுரம் கோட்ட அலுவலகத்திற்கு 50 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளதால், திட்ட பகுதிகள் நிறைந்த வண்டலூருக்கு இடமாற்றம் செய்யக்கோரி தமிழக அரசுக்கு பயனாளிகள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு, அரசு மானியத்துடன் பயனாளிகளுக்கு குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகிறது.

இதன் கோட்ட அலுவலகம் காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது, காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர், அரங்கநாதன் நகர், பொன்னேரி கரையில் புதிய ரயில் நிலையம் அருகே உள்ளது. இதில், கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் புதியதாக உதயமானது.  ஆனால் இதுவரை, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு என்று மேற்படி அலுவலகம் இல்லை. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் இரண்டு பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூரை சுற்றி 25 இடங்களிலும் மேற்படி திட்ட பகுதிகள் நிறைந்து உள்ளன.

எனவே, 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, காஞ்சிபுரத்தில் உள்ள கோட்ட அலுவலகத்தை வண்டலூருக்கு இடமாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயனாளிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து பயனாளிகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘திட்ட பகுதிகள் கீழ்க்கதிர்பூர் மற்றும் படப்பை ஆகிய பகுதிகளில் மட்டுமே உள்ளது. இதில், வண்டலூரை சுற்றி பீர்க்கன்கரனை, சேலையூர், தாம்பரம், அன்னை அஞ்சுகம் நகர், காயரம்பேடு, கீரப்பாக்கம், முருகமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 25 இடங்களில் திட்ட பகுதிகள் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதில் மேற்படி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் கேட்பதற்காக தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோட்ட அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதில் சரி வர பேருந்து வசதிகளும் இல்லை. இதற்காக பல நாட்கள் அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு என்று தனி அலுவலகமோ, தனி அலுவலரோ இல்லை. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் மையப்பகுதியாக வண்டலூர் உள்ளது. மேலும், வண்டலூரை சுற்றி அருகிலேயே ஏராளமான திட்ட பகுதிகள் உள்ளதால் காஞ்சிபுரத்தில் உள்ள கோட்ட அலுவலகத்தை வண்டலூருக்கு இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

The post திட்ட பகுதிகள் அதிகம் உள்ளதால் காஞ்சிபுரம் கோட்ட அலுவலகத்தை வண்டலூருக்கு மாற்ற வேண்டும்: பயனாளிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Divisional Office ,Vandalur ,Guduvanchery ,
× RELATED வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல்...