×

காஞ்சிபுரம் ரயில்வே சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: பொதுமக்கள் அச்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில்வே சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி மாமல்லன் நகர் பிரதான சாலை மற்றும் கோனேரிகுப்பம் ஊராட்சி மின் நகர், அண்ணா நகர், அசோக் நகர், திருவீதிபள்ளம், கலெக்டர் அலுவலகம், மடம் தெரு உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, நசரத்பேட்டை பகுதிகளில் தெரு நாய்கள் கும்பல் கும்பலாக சுற்றித் திரிகின்றன. இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டிச் செல்கின்றன.

ஒருசில நாய்களுக்கு தோல் நோய் ஏற்பட்டு ரோமம் உதிர்ந்து சொறி பிடித்ததுபோல உள்ளன. இதனால், சாலைகளில் செல்வோர் பயந்துகொண்டே நடந்து செல்ல வேண்டியநிலையும் உள்ளது. மேலும், சில பகுதிகளில் உடலில் காயங்கள் மற்றும் புண்களுடன் நோய் தாக்கிய தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவுமோ என் ஒரு வித அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அதிகளவில் நோய்பிடித்த தெருநாய்கள் சுற்றித்திரிவதால் மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து ரயில்வே சாலையை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘நோய் தாக்கிய தெருநாய்கள், சாலையில் நடந்து செல்லும் சிறுவர்களை துரத்துகின்றன. சில இடங்களில், நோய் தாக்கியதன் காரணமாக வெறிபிடித்துள்ள தெருநாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்களை கடிப்பதற்காக துரத்துகின்றன. அதனால், வாகனத்தில் செல்லும் நபர்கள் பயந்து நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உருவாகிறது. எனவே, தெரு நாய்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவேண்டும்’ என்றனர்.

பிராணிகள் நல மருத்துவர்கள் கூறுகையில், நன்றியுள்ள பிராணியாக அறியப்படும் நாயை நாம் செல்லப் பிராணியாக வளர்த்தாலும் அது ஒரு விலங்கு என்பதால் அதன் அடிப்படை குணம் அப்படியேதான் இருக்கும். அதற்கு பய உணர்ச்சி ஏற்பட்டால் தன்னை தற்காத்துக்கொள்ள மனிதர்களை பயமுறுத்தும். இந்த உணர்ச்சி அதிகளவில் தூண்டப்பட்டால் மனிதர்களை கடித்து குதறும். இதனால், ஏற்படும் விளைவுகள் மோசமானதாக இருப்பதால் நாய்களிடத்தில் அதிக எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்’ என்றனர். எனவே, பொதுமக்களின் அச்சம் போக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் தெருநாய்களின் தொல்லையை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் ரயில்வே சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Railway Road ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED செவிலிமேடு பாலாறு மேம்பாலம் சீரமைப்பு