×

அடிக்கடி விபத்துகள், வாகன நெரிசல்கள் ஏற்படுவதால் மதுராந்தகம் புறவழி சாலை பேருந்து நிறுத்தத்தை இடம் மாற்றவேண்டும்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகம் புறவழி சாலை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்துவதற்கு சாலையில் போதிய இடவசதி இல்லாததால் அடிக்கடி விபத்துகளும், வாகன நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, இந்த பேருந்து நிறுத்தத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரை சுற்றிலும் கருங்குழி பேரூராட்சி, மதுராந்தகம் ஒன்றியம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த நகரத்தில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்கள், அரசு வேலைகள், கட்டிட தொழிலாளர்கள், மோட்டார் வாகன உதிரிபாகம் தொழிற்சாலை ஆகியற்றில் பணி புரிந்த வருகின்றனர். இவர்கள், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுராந்தகம் பகுதி பைபாஸ் சாலை ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்திற்கு சென்று, அங்கிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும், தனியார் வாகனங்களிலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தினமும் சென்று வருகின்றனர்.

மேலும், தென் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் மதுராந்தகம் புறவழி சாலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்கின்றனர். எப்போதும் பரபரப்புடன் காணப்படும் மதுராந்தகம் புறவழிச் சாலை பேருந்து நிறுத்தம், பேருந்துகள் நின்று செல்ல அகல சாலையாக இல்லாததால், இந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையின் மையப் பகுதியிலேயே நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன.
அப்படி, பேருந்துகள் நிற்கும்போது, அதிவேகத்தில் பின்னால் வரும் வாகனங்கள் நிலை தடுமாறி பயணிகளை ஏற்றும் பேருந்துகள் மீதும் மோதி விடுகின்றனர்.

இதனால், பல உயிர்ப்பலிகளும் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளால் மாதத்தில் பத்து நாட்களுக்கும் மேலாக வாகன நெரிசல் ஏற்பட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் அவல நிலை உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல வருடங்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஏரிக்கரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் உள்ளதால் அகலப்படுத்தும் பணி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மதுராந்தகம் நகருக்குள் வடக்கு பைபாஸ் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் வழியாக பேருந்துகளும், வாகனங்களும் உள்ளே வந்து செல்கின்றன. இந்த வடக்கு பைபாஸ் வளைவு பகுதியில் இரண்டு ஏக்கர் நிலம் தேசிய நெடுஞ்சாலை துறையிடம் உள்ளது. இந்த காலி இடத்தில் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* மதுராந்தகத்தில் 1987ல் உருவாக்கப்பட்ட பைபாஸ் சாலை
1980ம் ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி சாலையாக இருந்தபோது, தென் மாவட்டங்களுக்கு செல்லும் கார் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மதுராந்தகம் நகருக்குள் சென்று செல்ல வேண்டி இருந்தது. அப்போது, ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக 1987ம் ஆண்டு வாகன நெரிசலை தவிர்க்க பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. 2006ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது, இந்த பைபாஸ் சாலை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

* நிற்காத பேருந்து
மதுராந்தகம் புறவழிச் சாலை பேருந்து நிறுத்தத்தில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருந்து சென்னை சென்ற அரசு பேருந்து மதுராந்தகம் பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி ஏற்றும்போது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அன்றிலிருந்து திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் அனைத்து பேருந்துகளும் மதுராந்தகம் புறவழி சாலையில் இன்று வரை நிற்பதில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகளும் பயணிகளை ஏற்றி செல்ல அந்த பேருந்து நிறுத்தத்தில் இட வசதி இல்லாததால் பேருந்து நிற்பதில்லை என பயணிகள் புகார் கூறியுள்ளனர்.

* வடக்கு பைபாஸ் பகுதியில்…
சென்னைக்கு அருகில் 80 கி.மீ தொலைவில் மதுராந்தகம் நகரம் உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பேருந்துகள் இந்த நகரில் உள்ள பைபாஸ் சாலை வழியாக சென்னை சென்று வருகிறன. இதனால், இங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போதுள்ள, பேருந்து நிறுத்தம் இட வசதி இல்லாமல் உள்ளது வரும் எதிர்காலங்களில் மக்கள் தொகை அதிகரித்து சென்னைக்கு வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, மதுராந்தகம் வடக்கு பைபாஸ் பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும்.

* தொடரும் உயிர் பலிகள்
மதுராந்தகம் புறவழி சாலையில் உள்ள பைபாஸ் பேருந்து நிறுத்தத்திற்கு ஏராளமான பொதுமக்கள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை நடந்தபடி கடந்து பேருந்து நிறுத்தத்திற்கு செல்கின்றனர். அப்படி நடந்து செல்லும்போது பொதுமக்கள் பேருந்துகள் மோதி உயிர் பலி ஏற்படுகின்றன. இந்த பைபாஸ் சாலையில் கடந்த 30 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

* பார்க்கிங் வசதி
புதிய பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தும்போது பயணிகள் நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது விபத்தில் சிக்காதவாறு நெடுஞ்சாலையை கடந்து செல்ல உயர் மேம்பாலங்களும், சாலை வசதியும் ஏற்படுத்த வேண்டும். பேருந்துகளில் வரும் பயணிகளை அழைத்துச்செல்ல கார், இருசக்கர வாகனங்களில் வந்து செல்லும் பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்தும் வகையில் இட வசதி ஏற்படுத்த வேண்டும்.

* விபத்தும் வாகன நெரிசலும்…
மதுராந்தகம் பைபாஸ் சாலையில் வாகன விபத்து ஏற்பட்டால் சுமார் இரண்டு கிலோ மீட்டர் அய்யனார் கோயில் பகுதியை தாண்டி வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். விழாக் காலங்களில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள், நெரிசலுடன் செல்லும்போது பைபாஸ் சாலையில் பேருந்துகள், சாலையின் மையப்பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும்போது வாகன நெரிசல் ஏற்படுகிறது.

The post அடிக்கடி விபத்துகள், வாகன நெரிசல்கள் ஏற்படுவதால் மதுராந்தகம் புறவழி சாலை பேருந்து நிறுத்தத்தை இடம் மாற்றவேண்டும்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madrantam Expressway ,Madurantakam ,Maduranthakam ,Overseas ,Madurandam Expressway Bus Stop ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் அருகே மோச்சேரியில் அரசு...