×

மேல்விஷாரம் நகராட்சியில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் தரவேண்டும்: எடப்பாடி கோரிக்கை

சென்னை: மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் தர வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய இஸ்லாமிய சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த சுமார் 2000 பேர் குடும்பத்துடன் வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை அரசு வழங்கியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்களுடைய குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் அவர்களை அப்புறப்படுத்த, நோட்டீஸ் அனுப்பியதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற அமர்வை அவர்கள் அணுகியபோது, 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் அவர்களுக்கு மாற்று இடம் தந்துவிட்டு காலி செய்ய உத்தரவிட்டது. ஆனால், குடியிருப்புகளுக்கான மாற்று இடம் தராமல், திடீரென்று 21.6.2022 அன்று அங்கிருந்த 487 வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாற்று இடத்தை உடனடியாக ஆர்ஜிதம் செய்து, வீடு கட்ட போதிய கடன் வசதி செய்துதர வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மேல்விஷாரம் நகராட்சியில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் தரவேண்டும்: எடப்பாடி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Melvisharam ,Edappadi ,Chennai ,Edappadi Palaniswami ,Melvisharam Municipality ,
× RELATED அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை...