×

கர்நாடகாவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்ப்பா?


பெங்களூர்: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்த வேண்டும், ஒன்றிய அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் என்ன என்பதை விளக்க வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். ஏற்கனவே பீகாரில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜனதா தளம் ஐக்கிய கூட்டணி அரசாங்கம் வெற்றிகரமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை அறிவித்தது. அத்துடன் பீகாரில் இடஒதுக்கீடு அளவையும் உயர்த்தியது. தற்போது நடைபெற்று வரும் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரசின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகவும் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் என முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.

ஆனால் அங்கு பெரும்பான்மை ஜாதிகளான ஒக்கலிகா, லிங்காயத்துகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. ஒக்கலிகா சங்கத்தினர், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக கையெழுத்து இயக்கமும் நடத்தி வருகின்றனர். ஒக்கலிகா ஜாதி சங்கம் நடத்தி வரும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் ஒக்கலிகா ஜாதியை சேர்ந்த துணை முதல்வர் டி.கே.சிவகுமார், உயர்கல்வி அமைச்சர் சுதாகர், முன்னாள் பிரதமர் தேவகவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, எதிர்க்கட்சி தலைவர் அசோகா, குமாரசாமி, சதானந்த கவுடா என பலரும் கையெழுத்திட்டுள்ளனர். காங்கிரஸ், பாஜ, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஒக்கலிகா ஜாதியை சேர்ந்த தலைவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், ஒக்கலிகா ஜாதியினரை போலவே பழங்குடிகள், பஞ்சமசாலி லிங்காயத்துகள், வீரசைவர்கள் என பல ஜாதியினருமே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்க்கின்றனர்’ என்றார். அதே நேரத்தில் ஒக்கலிகா ஜாதியினரின் எதிர்ப்பு குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? முதலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வோம். அமைச்சரவையில் விவாதிப்போம். அதற்கு பிறகு இதை பற்றி ஆராய்வோம்’ என்றார்.

The post கர்நாடகாவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்ப்பா? appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Deputy Chief Minister ,TK Shivakumar ,Bangalore ,OBC ,Union government ,Jatiwari ,Deputy ,CM ,Dinakaran ,
× RELATED டி.கே.சிவகுமார் மீது லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு