×

40+ பெண்கள்…தேவைப்படும் பரிசோதனைகள்…அறுவைசிகிச்சைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஆரோக்கியமான வாழ்வு என்பது வரம். அத்தகைய ஆரோக்கியம், முதிர்ந்த வயதில் அனைவருக்கும் கிடைக்கும் எனில் அது மிகப்பெரிய வரம். முதுமைக்கால நோய்களை எல்லாம் மருந்தினால் மட்டுமே போக்கிவிட முடியாது. சில நோய்களுக்கு அறுவைசிகிச்சையும் தேவைப்படும். ஆனால், முதியோர்களில் சிலர் எளிதில் அதற்கு ஒப்புதல் தருவதில்லை. அறுவை சிகிச்சை மீதான அச்சமே அதற்குக் காரணம், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குச் சில நோய்களை அறுவைசிகிச்சையின் மூலமே குணப்படுத்த முடியும்.

உதாரணம்: கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாயில் தோன்றும் புற்றுநோய், கர்ப்பப்பையில் கட்டி, கர்ப்பப்பை கீழே இறங்கிவிடுதல், சிறுநீர்க் கசிவு, குடல் இறக்கம், மூலம், தைராய்டு கட்டிகள் மற்றும் பித்தப்பையில் கற்கள்.

வயதான பெண்களுக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய தொல்லைகளோடு நீரிழிவு நோய், ரத்தச்சோகை, உடல் பருமன் மற்றும் தைராய்டு தொல்லைகளும் மறைந்திருக்கும். அவற்றைக் கண்டறிந்து அறுவைசிகிச்சைக்கு முன்பாகத் தக்க சிகிச்சை அளிக்க வேண்டும். அறுவைசிகிச்சை முறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இருப்பதால், ஆண்களைவிடச் சற்றுக் குறைவாகவே இதயம் மற்றும் ரத்த நாளங்கள் சார்ந்த தொல்லைகள் இருக்கும். அறுவைசிகிச்சைக்குப் பின்னர், ஆண்களைவிடப் பெண்கள் விரைவில் குணமடைந்து வீட்டிற்குச் சென்றுவிடுகின்றனர்.

அறுவைசிகிச்சை செய்வதற்கு மயக்க மருந்து கொடுத்தல் மிக இன்றியமையாதது. நோயாளியை நன்கு பரிசோதனை செய்து அவர் மயக்க மருந்தினை ஏற்றுக்கொள்ளும் தகுதி உடையவரா என்று மயக்க மருந்து நிபுணர் முடிவு செய்வார். அதன்பின்னரே அறுவைச் சிகிச்சைக்கு ஆயத்தப்படுத்துவார். ஓர் அறுவைச் சிகிச்சையின் வெற்றி, மயக்க மருந்து தரும் திறமையான நிபுணரைப் பொறுத்தே அமையும் என்றால் அது மிகையாகாதுமார்பகப் புற்றுநோய்ஐம்பது வயதைக் கடந்த பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம். புற்றுநோயின் தன்மை மற்றும் ஒட்டுமொத்த உடல் நிலையைப் பொறுத்தே சிகிச்சை முறை அமையும். அறுவை சிகிச்சையே இதற்குச் சிறந்த சிகிச்சை முறையாகும். அறுவை சிகிச்சைக்குப் பின்பு கதிர்வீச்சு சிகிச்சை தேவைப்படும்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் இது முதல் இடத்தை வகிக்கிறது. ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்குக் கர்ப்பப்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பாகங்களை முழுமையாக அறுவை சிகிச்சை செய்து எடுத்துவிட வேண்டிவரும். சற்று, காலம் தாழ்த்திய புற்றுநோய்க்கு மருத்துவச் சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சையோடு அறுவைசிகிச்சை முறையும் தேவைப்படும்.

கர்ப்பப்பை இறக்கம்

அதிக குழந்தைகளைப் பெறுவது, பிரசவத்திற்குப் பின்பு உடனடியாக அதிக எடைகளைத் தூக்குவது, அடி வயிற்றுககு அதிக உழைப்பு தருவது மற்றும் உடல் எடை அதிகரிப்பது போன்றவற்றால் கர்ப்பப்பை பலவீனமடைந்து இறக்கம் உண்டாகிறது. சிறுநீர்ப் பிரச்னைகள், இடுப்பில் வலி, வெள்ளைப்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெண் மருத்துவரை அணுகி கர்ப்பப்பை முழுப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும்.

கர்ப்பப்பை இறக்கம் ஆரம்பநிலையில் இருப்பின் ஸ்லிங் எனப்படுகிற அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காணலாம். அதாவது இறங்கிய கர்ப்பப்பைப் பகுதியை லேப்ரோஸ்கோபி சிகிச்சையின் மூலம் இழுத்து வைத்து டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்திச் சரிசெய்து விடலாம். கர்ப்பப்பை முழுவதும் கீழிறங்கும் நிலை இருக்குமாயின் கர்ப்பப்பையைக் கீழே வழியாக அகற்றுதல் மற்றும் சிறுநீர்ப்பைக்கான சிகிச்சை மற்றும் மலக்குடல் இறக்கத்திற்கான சிகிச்சையையும் செய்து கொள்ள வேண்டும்.

சிறுநீர்க்கசிவு

சிறுநீர்த்தாரையில் செய்யும் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீர்க்கசிவைக் கட்டுப்படுத்த முடியும். ஸ்லிங் எனும் எளிய அறுவை சிகிச்சை மூலம் நல்ல பயன் பெறலாம்.

குடலிறக்கம்

அறுவைசிகிச்சைக்குப் பின்னர் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் தழும்பிலிருந்து ஏற்படும் குடலிறக்கமானது, அதிக அளவில் பெண்களுக்கு ஏற்படும். இதன்முக்கிய அறிகுறி, புடைப்பு போன்ற ஒரு பகுதி தழும்பின் ஒரு பகுதியில் காணப்படுவதுதான். இது சிறியதாக ஆரம்பித்து காலப்போக்கில் பெரிதாகிக் கொண்டே இருக்கும். இருமும்போதும், தும்மும்போது அதிகரிக்கும். படுக்கும்போது மட்டும் அளவு குறைந்துவிடும். வலிபோன்ற தொல்லைகள் ஏதுமில்லையெனில் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் பெல்ட் அணிவதன் மூலமே இதைக் கட்டுக்குள் வைக்கலாம். அறிகுறிகள் அதிகம் இருப்பின் அறுவைசிகிச்சை அவசியம் தேவைப்படும்.

தைராய்டு கட்டிகள்

கழுத்தின் முன்பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி, சற்று வீங்கி இருக்கும் அல்லது அந்தசுரப்பியில் பல கட்டிகள் இருக்கலாம். இந்தக் கட்டியை மாத்திரையினால் குறைக்க முடியாது. ஆனால், அறுவைசிகிச்சையின் மூலம் கட்டியை முழுவதுமாக அகற்றிவிடலாம். சிலர் அறுவைசிகிச்சைக்குப் பின்பு தொடர்ந்து தைராய்டு மாத்திரையை
எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் நோய்களைக் குணமாக்குவதில் படபடப்பு மிகுந்த படக்காட்சி போலத் திருப்பங்கள் நிறைந்திருக்கும். எனினும் நலமடைந்த பின்பான அவர்களின் புன்னகை ஒன்றே அறுவை சிகிச்சை மருத்துவருக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தும்.

வயதான பெண்களுக்கான பரிசோதனைகள்

பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் செய்யப்படும் மாஸ்டர் ஹெல்த் செக்-அப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். அவை ஏன் முக்கிய
மானதாகக் கருதப்படுகின்றன என்பதும், எந்த அளவுக்கு அடிக்கடி செய்யமுடியும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பெண்கள் தங்கள் பிரச்னைகளை அடையாளம் கண்டு சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் நீண்டகாலச் சிக்கல்களை கூட தவிர்க்கலாம். சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கு உதவலாம்.

*மகளிர் நல மருத்துவரால் மருத்துவப் பரிசோதனை (கிளினிக்கல் ஏக்ஸமினேஷன்)

*பாப்ஸ்மியர்

*மேமோகிராம்

*அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் முழுவயிறு மற்றும் இடுப்புப் பகுதி

*டெக்ஸா ஸ்கேன்

மருத்துவப் பரிசோதனை

அனைத்துப் பெண்களும் ஒரு மகளிர் மருத்துவ நிபுணரிடம் அவர்களின் அந்தரங்கப் பாகங்களில் ஏதேனும் தடிப்புகள், தொற்று, வறட்சி போன்ற ( Atropic changes) பிரச்னைகள் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கத் தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் பாப்ஸ்மியர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பாப்ஸ்மியர்

இது அடிப்படையில் கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய்க்கான ஸ்கிரீனிங் சோதனை. இது திருமண வயதிலிருந்து 65 வயது வரை ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. இது கருப்பை வாயில் உள்ள அசாதாரண செல்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது. இந்தப் பரிசோதனை மூலம் புற்றுநோய் ஆரம்பிக்கும் காலத்திற்கு முன்பே கண்டறியமுடியும். இந்தப் புற்றுநோய் முக்கியமாக ஹீமன் பாப்பிலோமா வைரஸ் எனப்படும் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது.

டெக்ஸா ஸ்கேன்

இது எலும்புகள் வலிமை இழத்தலைக் கண்டறிய செய்யப்படும் சிறப்பு ஸ்கேன் ஆகும். வயதானவர்களுக்கு எலும்புமுறிவுகள் ஏற்படக்கூடிய மூன்று சிறப்புப் பகுதிகள் உடலில் உள்ளன. அதாவது இடுப்பு அல்லது மூட்டு, மணிக்கட்டு மூட்டு மற்றும் இடுப்பு முதுகெலும்புப் பகுதி, எலும்பு முறிவு அபாயத்தைக் கணிக்கும் டி ஸ்கோர் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. முன்கூட்டியே மாதவிடாய் நின்ற பெண்கள், மெல்லிய பலவீனமான பெண்கள், தைரோடாக்சிகோஸிஸ் உள்ளவர்கள், நீண்டகால ஸ்டீராய்டு மாத்திரைகள் உபயோகிப்பவர்கள் ஆஸ்டியோபோரோசிஸிக்கு ஆளாகின்றனர். ஒரு சிறிய காயம் அல்லது கீழே விழுதல்கூட வயதான பெண்களின் எலும்பு முறிவுகளுக்கு வழிவகுக்கும்.

இவை தவிர சி.பி.சி தைராய்டு பரிசோதனை, ரத்தச் சர்க்கரை நோய்ப் பரிசோதனைகள், கல்லீரல் பரிசோதனைகள், சிறுநீரகப் பரிசோதனைகள், ஈசிஜி எக்கோ போன்ற சிறப்புப் பரிசோதனைகள் தேவைப்படும்.

நாம் புரிந்துகொள்ள வேண்டியது வருமுன் காக்க என்ற பழமொழிக்கேற்ப ஆரம்பக் காலத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், அந்நோயினைத் தடுத்து அதிலிருந்து மீள உதவிபுரிகிறது.

மேமோகிராம்

இது மார்பகப் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் சோதனையாகும். இது 40 வயதுக்குப் பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும். குடும்பத்தில் யாருக்காவது இந்தப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு நெருக்கமான கண்காணிப்புக்காக ஆண்டுதோறும் செய்யப்படலாம். இது இரண்டு சோதனைகளை உள்ளடக்கியது.

டிஜிட்டல் எக்ஸ்ரே மேமோகிராபி

மற்றும் சோனோ மேமோகிராம் (ஸ்கேன்). சில குறிப்புகள் எக்ஸ்ரேவில் அடையாளம் காணப்படுகின்றன. மற்றும் சில குறிப்புகள் ஸ்கேன் மூலம் அடையாளம் காணப்படு
கின்றன. ஸ்கேன் கருவி மூலம் சில கட்டிகளை பயாப்ஸி செய்ய உதவுகிறது.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்

இது ஒவ்வொர் ஆண்டும் வயிறு மற்றும் பிறப்புறுப்பில் செய்யப்படும் ஸ்கேன் ஆகும். பொதுவாக மாதவிடாய் நின்ற பிறகு, கர்ப்பப்பை மற்றும் கருப்பைகள் சுருங்கி எண்டோமெட்ரியம், அதாவது கருப்பையின் புறணி மெல்லியதாகிறது (< 4mm). இந்தப் பரிசோதனை அதைக் கண்டறிய உதவும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post 40+ பெண்கள்…தேவைப்படும் பரிசோதனைகள்…அறுவைசிகிச்சைகள்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வணக்கம் நலந்தானே!