×

மத்திய பிரதேசத்தில் பாஜவுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம்: தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள்


அசோக்நகர்: மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜவுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் கொடுமை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிக்க தண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 17ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. எந்தவித சச்சரவும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது. இந்தநிலையில் பாஜவினரால் அசோக்நகர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஒரு கொடுமை அரங்கேறி வருகிறது.

அங்குள்ள முங்கவாலி சட்டப்பேரவை தொகுதியில் நாயக்கேடா என்ற கிராமம் உள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அங்கு 4 ஆழ்த்துளை கிணறுகள் உள்ளன. இந்தநிலையில் வாக்குப்பதிவு நடைபெற்ற மறுதினம் முதல் அந்த ஆழ்துளை கிணற்றின் அருகில் அதிகளவு பாஜவினர் அங்கு கூடியுள்ளனர். அந்த கிணறுகளில் இருந்து பாஜவுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கூறுகையில், ‘நாங்கள் எங்களது தேவைக்காக இங்கிருக்கும் ஆழ்த்துளை கிணறுகளில் தான் தண்ணீர் பிடித்து வருகிறோம். கடந்த 2 நாட்களாக அங்கு பாஜவினர் சில வந்து இருக்கின்றனர்.

தண்ணீர் பிடிக்க போகும் மக்களிடம் பாஜவுக்கு வாக்களித்தீர்களா என்று கேட்டு சத்தியம் செய்ய அவர்கள் வற்புறுத்துகின்றனர். சத்தியம் செய்ய மறுப்பவர்களுக்கும், பாஜவுக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் தண்ணீர் கொடுக்காமல் அடித்து விரட்டுகிறார்கள். இரவு நேரத்தில் மோட்டாரை போட்டு பாஜவுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நாங்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் கடும் அவதியடைந்து வருகிறோம்,’என்றார். பாஜவினரின் இந்த செயலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பலர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

The post மத்திய பிரதேசத்தில் பாஜவுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம்: தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : BJP ,Madhya Pradesh ,Ashoknagar ,
× RELATED மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசை...