×

லாட்டரி சீட்டு விற்பனை செய்த பாஜ மாவட்ட தலைவரின் மனைவி அதிரடி கைது


ஓமலூர்: ஓமலூரில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த பாஜ மாவட்ட தலைவரான முன்னாள் எம்எல்ஏவின் மனைவியை போலீசார் கைது செய்தனர். இவர், மொபைல் போன் மூலம் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் நகர் மற்றும் வட்டார கிராமங்களில் ஒரு நம்பர், மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதன்பேரில், ஓமலூர் போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். அப்போது, ஓமலூர் அருகே புளியம்பட்டி பகுதியில் ஒரு பெண் மொபைல் போன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பெண்ணை ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர் தர்மபுரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரின் மனைவி மனோன்மணி (50) என்பது தெரியவந்தது. இவர், பாஸ்கரிடமிருந்து பிரிந்து வந்து கடந்த 10 ஆண்டுகளாக ஓமலூர் புளியம்பட்டியில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த ஐந்தாண்டுகளாக மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. உடனே, போலீசார் மனோன்மணியை கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை மீண்டும் லாட்டரி விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

பாஸ்கர் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தர்மபுரி மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். இவர், தர்மபுரி தொகுதியில் தேமுதிக சார்பில் எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவரை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிரசாரத்திற்காக வந்தபோது, திறந்த வேனிலேயே பொதுமக்கள் மத்தியில் கன்னத்தில் பளார் அறை விட்ட சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜ மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏவின் மனைவி லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் கைதான சம்பவம் ஓமலூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post லாட்டரி சீட்டு விற்பனை செய்த பாஜ மாவட்ட தலைவரின் மனைவி அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Omalur ,MLA ,
× RELATED ரூ,1000 + ரூ,180 ஜிஎஸ்டி...